பிக்குமார் உடை தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்ற வேளையில் அதற்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ, தற்போது அதுதொடர்பில் ஊடகங்களில் கருத்து வெளியிடுவது வெறும் பொய்யான பிரசாரமே என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பிக்குமார் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.
அது தவறு.
அவர்கள் மேற்கொண்ட தவறுகளுக்கு புத்த மதத்தை பயன்படுத்திக்கொள்ள முனைகின்றனர்.
இவ்வாறு சென்றால், எதிர்காலத்தில் மிக் விமான கொள்வனவு மற்றும் தாஜூதீன் வழக்கு என்பவற்றிற்கும் பிக்குமார் நீதியை நிலைநாட்ட வேண்டி வரும்.
ஆகவே பிக்குமார் இவ்வாறான நிதி சேகரிக்கும் பணிகளை கைவிடவேண்டும் என தாம் கோருவதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்காக பிக்கு உடைக்காக சிறைச்சென்றவர்களை காப்பாற்றும் நிதியம் ஏற்பாடு செய்துள்ள நிதிசேகரப்பு பயணம் இன்று ஆரம்பமாகின்றது.
கொழும்பு கோட்டை சம்புத்தாலோக விகாரையின் முன்னால் இருந்து இன்று காலை இந்த பயணம் ஆரம்பமாகவுள்ளதாக மெதகொட அஹயதிஸ்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல் நாளையும் நாளை மறுதினமும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இந்த நிதி சேகரிக்கும் பயணம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.