அவுஸ்திரேலிய ஒலிம்பிக் குழுவின் ஊடக தலைவரான மைக் டன்கிரீட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மைக் டன்கிரீட் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய ஒலிம்பிக் குழுவின் ஊடக தலைவராக செயற்பட்டுவந்தார்.
இந்த நிலையில் அவர் தன்னை மிரட்டியதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் குழுவின் முன்னாள் தலைவர் ஃபியோனா டீ ஜாங் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டில் மைக் டன்கிரீட் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகள் மூலமாக தன்னுடைய மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்திவிடுவதாக மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று ஒலிம்பிக் குழுவின் முன்னாள் உறுப்பினர்களும் மைக்டன் கிரீட் மீது முறைப்பாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணைகளின் மூலம் மைக் டன்கிரீட் அந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டபோதும் அவர் தமது தவறை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன் ஃபியோனா டீ ஜாங்கிடம் மன்னிப்பும் கோரினார்.
இதனை அடுத்து அவர் கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
எனினும் ஒலிம்பிக் குழுவை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அவர் தொடர்ந்தும் பணியாற்றிவந்த நிலையில் நேற்றைய தினம் அந்த பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.