இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீதை நாட்டுக்குத் திருப்பியனுப்ப இலங்கையிடம் உதவி கேட்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
இது பற்றித் தெரிவித்த இலங்கைக்கான மாலைதீவு தூதர் மொஹமட் ஹுசெய்ன் ஷரீப், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நஷீத், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டபோது இலங்கையில் தஞ்சம் புகுந்ததாகத் தெரிவித்தார்.
முன்னதாக, மொஹமட் நஷீதை இலங்கைக்கான மாலைதீவு தூதர் சட்டத்துக்கு முரணான வகையில் இலங்கையில் தடுத்து வைக்க முயற்சிப்பதாகவும், பலவந்தமாக அவரை மாலைதீவுக்குத் திருப்பியனுப்ப முயற்சிப்பதாகவும் நஷீதின் சார்பாக சர்வதேச சட்ட ஆலோசகர்கள் தெரிவித்திருந்தனர்.
இதுபற்றித் தெரிவித்த சிரேஷ்ட சட்ட ஆலோசகர் அமல் க்ளூனி, நஷீதைத் தடுத்துவைக்க மாலைதீவு தூதர் முயற்சிக்கும் பட்சத்தில் அது இலங்கையின் இறையாண்மையை மீறும் செயலாகவும், தண்டனைக்குரிய குற்றமாகவும் அமையும் என்று தெரிவித்தார்.
“விசாரணை என்ற பெயரில் நஷீத் பழிவாங்கப்பட்டுள்ளார். எனவே, அவர் தண்டனை அனுபவிக்கத் தேவையில்லை. அவர் மாலைதீவுக்குத் திருப்பியனுப்பப்படக் கூடாது. அதற்கான எந்தவொரு முயற்சியையும் இலங்கை எடுக்கக் கூடாது. அவருக்குரிய மரியாதைகளுடன் அவரது உரிமைகளை வழங்க இலங்கை உறுதியளிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மோமூன் அப்துல் கையூமின் முப்பது வருட ஆட்சி, 2008ஆம் ஆண்டு மொஹமட் நஷீத் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. எனினும், 2012ஆம் ஆண்டு நஷீதுக்கு எதிராகக் கிளம்பிய ஊழல் குற்றச்சாட்டுக்களையடுத்து அவர் பதவி விலகினார்.
எனினும், அவரது பதவிக் காலத்தில் நீதிபதியொருவரைக் கடத்த முயற்சித்ததாகக் கூறித் தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அவருக்கு பதின்மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.