கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பிரதேசத்து மக்கள் இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
குறித்த பிரதேசத்தின் 4 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்கமுடியுமெனவும், ஏனைய 16 ஏக்கர் காணிக்கு இன்று அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே மக்களை அவர்களது போராட்டத்தைக் கைவிடுமாறு நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை மீள்குடியேற்ற அமைச்சினால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
எனினும் தமது முழுமையான காணிகளையும் ஒப்படைக்கும் வரை தாம் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர்.
பரவிபாஞ்சான் இராணுவ முகாமுக்குமுன்னால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி ஆகியோர் நேரில் சென்று தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.