நீண்ட காலமாக தமது பூர்வீக மண்ணிற்கு செல்வதற்கான ஆவலில் இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்களின் பின்னர் கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மீள்குடியேற்றத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே நில அளவீட்டினை தாம் பார்ப்பதாகவும் அது மகிழ்வினை தருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரணைதீவு மக்கள் 2008ம் ஆண்டிற்கு பின்னர் குறித்த பகுதியில் தங்கி நின்று தொழில் புரிவதற்கு கடற்படையினர் அனுமதி வழங்காமையால் அதிக எரிபொருள் செலவுடன் மீன்பிடித்து , அங்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய கடல் வளங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் மீள்குடியேற்றம் செய்யுமாறு தெரிவித்து தொடர் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்நிலையில் இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் நில அளவீடு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை மனதளவில் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர். தம்மை மீள்குடியேற்றம் செய்யும் பட்சத்தில் இந்த அரசினை வாழ்நாளெல்லாம் நன்றியோடு இருப்போம் எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதே வேளை எடுக்கப்பட்ட முயற்சியை விரைவுபடுத்திதருமாறும், மழைகாலத்திற்கு முன்னர் அங்கு சென்று வீடுகளை அமைத்துக்கொள்ள உதவுமாறும் மக்கள் கோருகின்றனர்.