இனப்பிரச்சினை விவகாரத்தில் பௌத்த மத பீடத் தலைவர்கள் கொண்டுள்ள முரண்பாடான நிலைமைக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நிலைப்பாட்டையும் அரசியல் எதிர்பார்ப்பையும் வடமாகாண முதலமைச்சர் அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார். கண்டியில் மல்வத்த மகாநாயக்கரான திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரரையும், அதன் பின்னர் அஸ்கிரிய மகாநாயக்கரான வரகாகொட ஞானரத்ன தேரர் தலைமையிலான அஸ்கிரிய பீடத்தின் தேரர்களையும் அவர் சந்தித்தபோதே, இந்த விடயங்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மல்வத்த மகாநாயக்க தேரருடனான சந்திப்பில் அவர் அரசியல் பேச விரும்பவில்லை. இருந்த போதிலும், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதியாகவும், பிரிவினை கோருபவராகவும் தான் பிழையாக சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பதை விக்னேஸ்வரன் மல்வத்த மகாநாயக்க தேரரிடம் எடுத்துரைத்திருந்தார்.
அத்துடன் போர் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களுடைய நிலைமைகளையும், அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளையும், அவர்களுடைய எதிர்பார்ப்புக்களையும் அவர் மல்வத்த மகாநாயக்கரிடம் தெரிவித்திருந்தார்.
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான ஒரு தீர்வே பொருத்தமானது. அதுவே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வல்லது என்பதையும் விக்னேஸ்வரன் அவரிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். சமஷ்டி என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல. நாடு பிரிவுபடாமல் இருப்பதற்கான அரசியல் வழிமுறை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
பௌத்த பீடத்தினரின் நிலைப்பாடும் முதலமைச்சரின் நோக்கமும்
எனினும், அரசியல் தீர்வுக்கான முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு மல்வத்த மகாநாயக்க தேரர் நேரடியாகப் பதிலேதும் கூறவில்லை. மாறாக ஒரு புன்சிரிப்பையே பதிலாக அளித்திருந்தார். அந்தப் புன்சிரிப்பின் உண்மையான அர்த்தம் என்ன என்பது மறுநாள் முலமைச்சர் விக்னேஸ்வரன் கண்டி அஸ்கிரிய பீடத்தைச்சேர்ந்த தேரர்களைச் சந்தித்தபோது, தெளிவாகியிருந்தது. இந்தச் சந்திப்பின்போது, சமஷ்டி ஆட்சி முறைமையைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதைக் கண்டிப்பாக, கடுந்தொனியில் அவர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்திருந்தனர். இந்தச் சந்திப்பு சங்கடமானதொன்றாக அமைந்திருந்தது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரனே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதில் இருந்து அந்தச் சந்திப்பு எத்தகையது என்பது புலனாகியிருக்கின்றது.
தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாட்டையும், அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றியும் அவற்றுக்கு அவசரமாக தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் பௌத்த மத பீடாதிபதிகளுக்கு எடுத்துரைப்பதற்காகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் கண்டிக்கான தமது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல், தான் ஓர் இனவாதி என்றும் வடமாகாண சபையானது இனவாதப் போக்கில் நாட்டைத் துண்டாடுவதற்காகச் செயற்படுகின்றது என்று சிங்கள மக்கள் மத்தியில் உருவகப்படுத்தியிருப்பதும், அதே கருத்தை பௌத்த மத பீடாதிபதிகளும் கொண்டிருப்பதும் தவறானது, உண்மைக்கு மாறானது என்பதை எடுத்துரைப்பதற்காகவே விக்னேஸ்வரன் பௌத்த பீடத்தைச் சேர்ந்த மதத் தலைவர்களைச் சந்திப்பதற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
வடமாகாண முதலமைச்சரின் கருத்துக்கள் மற்றும் அவருடைய செயற்பாடுகள் என்பன தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கொள்கை மற்றும் இலட்சியப் போக்கை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், தென்னிலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் அவர் நாட்டைத் துண்டாடுவதற்கான செயற்பாடுகளிலேயே அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டிருக்கின்றார் என்ற கருத்துருவாக்கத்தையே சிங்கள தீவிரவாதிகளான அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். அதேவேளை, பௌத்த மதத்தின் உயர் பீடமாகிய நான்கு பீடாதிபதிகளும், அவற்றைச் சேர்ந்தவர்களும்கூட முதலமைச்சரை ஓர் இனவாதியாகவும் நாட்டைத் துண்டாடுபவராகவுமே கருதுகின்றார்கள். இந்த நிலையில் அவர்களுடைய நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே கண்டி மல்வத்த மற்றும் அஸ்கிரிய பௌத்த மத பீடங்களைச் சேர்ந்த பீடாதிபதிகளை அவர் சந்தித்திருந்தார்.
பேரின அரசியலின் அச்சாணி
பௌத்த மதத்தைப் பொருத்தமட்டில் அதன் தலைமையகமாக நான்கு பௌத்த பீடங்கள் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் கண்டி மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன. அதேபோன்று அரசியல்வாதிகள் மத்தியிலும் இந்த பீடங்களின் பீடாதிபதிகள் அபரிமிதமான செல்வாக்கைப் பெற்றிருக்கின்றார்கள். சிங்கள பொதுமக்களாயினும்சரி, அரசியல் தலைவர்களாயினும்சரி, இந்த மத பீடங்கள் கூறுவதே அவர்களுக்கு தெய்வாக்காகும். அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள் மற்றும் அவர்கள் எடுக்கின்ற நிலைப்பாடுகளுக்கு மாறாகச் செயற்படுவதற்கு எவருமே முற்படமாட்டார்கள்.
சிங்கள அரசியல் களத்தின் அடிநாதமாகிய வாக்குப் பலமானது பௌத்த மதத் தலைவர்களின் விரலசைவுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டது. ஆகவே, எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் பௌத்த மத பீடத் தலைவர்களின் கருத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும் எதிராகச் செயற்படத் துணிவதில்லை. அவ்வாறு துணிபவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்கள் என்பதே தென்னிலங்கை அரசியலின் யதார்த்தமாகும்.
இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே, பௌத்த மதத்தின் மேன்மைக்காகவே சிங்களத் தலைவர்கள் செயற்பட்டிருந்தார்கள். அதேபோன்று அரசர் காலத்து ஆட்சி முறைப் பண்புக்கு அமைவாக பௌத்த மதத் தலைவர்கள் அரசியலிலும் நாட்டின் நிர்வாகச் செயற்பாடுகளிலும், பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தார்கள். நாடு சுதந்திரமடைந்து ஜனநாயக முறைப்படி ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், முக்கியமான விடயங்களிலும் தேசிய அளவிலான பிரச்சினைகள் விவகாரங்களிலும் பௌத்த மதத் தலைவர்களின் முடிவையொட்டியே ஆட்சியாளர்களும் தீர்மானங்களை, மேற்கொண்டும், கொள்கைகளை வகுத்தும் செயற்பட்டு வருகின்றார்கள்.
கடுமையான நிலைப்பாடு
இத்தகைய ஒரு பின்னணியில் நல்லாட்சி அரசாங்கமும்கூட, பௌத்த மதத் தலைவர்களின் விருப்பத்திற்கும் தீர்மானத்திற்கும் எதிராகச் செயற்பட முடியாத நிலையில் இருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் நல்லவர்களாக இருக்கலாம். தேசிய சிறுபான்மை இன மக்களாகிய தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அரசியல் ரீதியான ஆர்வத்தைக் கொண்டிருக்கலாம்.
ஆனால், அவர்கள் பௌத்த மதத் தலைவர்களின் தீர்மானம் என்ற கடிவாளத்துக்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றார்கள். அந்தக் கட்டுப்பாட்டில் இருந்து அவர்களால் விடுபட்டு ஆட்சி நடத்தவோ அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவோ முடியாது. இத்தகைய ஒரு நிலையில்தான் கண்டி மல்வத்த மற்றும்அஸ்கிரிய பீடாதிபதிகளைத் தனிப்பட சந்தித்து தமிழ் மக்களின் நிலைமைகளையும் அவர்களுடைய அபிலாசைகளையும் எடுத்துக் கூறுவதற்கான முயற்சியில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஈடுபட்டிருந்தார்.
மல்வத்த மகாநாயக்கரை அவரால் தனிப்பட சந்திக்க முடிந்தது. தனது கருத்துக்களை அவரிடம் எடுத்துக் கூறுவதற்கும் இயலுமாக இருந்தது. அவர் அரசியல் விவகாரம் குறித்து முதலமைச்சருடன் பேசுவதற்குத் தாயராக இருக்கவில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். அதனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களுடைய அரசியல் நிலைமைகளை எடுத்துரைத்து, சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வின் அவசியம் குறித்து வலியுறுத்தியபோதிலும், மல்வத்த மகாநாயக்க தேரர் அதுபற்றிய தனது கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், கண்டி அஸ்கிரிய மகாநாயக்கரை முதலமைச்சர் விக்னேஸ்வரனால் தனிப்பட சந்திக்க முடியவில்லை. அவருடன் அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த 12 தேரர்களும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். முதலமைச்சரின் கருத்துக்களைச் செவிமடுப்பதற்கு அவர்கள் தாயாராக இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பௌத்தர்கள் மத்தியில் தாங்கள் எவ்வாறு உதிஉயர் நிலையில் இருக்கின்றோம் என்பதையும், தாங்கள் எந்த அளவுக்கு சக்திவாய்ந்தவர்கள் என்பதையும் வெளிக்காட்டும் வகையிலான ‘மேல் நிலையில்’ இருந்தவாறே தமது கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
நாட்டைப் பிரிப்பதற்கே சமஷ்டி ஆட்சிமுறை கோரப்படுகின்றது என்ற தமது நிலைப்பாட்டை அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த தேரர்கள் அழுத்தம் திருத்தமாக முதலமைச்சரிடம் கூறியுள்ளனர். சமஷ்டி என்பது பிரிவினை என்ற தங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என்பதையும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஒற்றையாட்சி முறையிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தமது இறுக்கமான நிலைப்பாட்டை அவர்கள் முதலமைச்சரிடம் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
மாற்றத்திற்கான முயற்சி
சமஷ்டி முறையில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற தமிழர் தரப்பின் தேசிய ஒற்றுமை சார்ந்த நிலைப்பாட்டை பௌத்த மதத்தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புதிய விடயமல்ல. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் ஊடாக நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லை என்பதும் ஏற்கனவே தெரிந்த விடயமே.
பௌத்த மத மேலாதிக்கம் கொண்ட ஒற்றையாட்சியின் கீழ் தேசிய அந்தஸ்து பெற்றுள்ள சிறுபான்மை இன மக்கள் இரண்டாந்தர குடிமக்கள் என்ற நிலையிலான ஓர் அரசியல் தீர்வையே சிங்கள பௌத்த தீவிரவாதிகள் விரும்பியிருக்கின்றார்கள். அதனை ஆதரிக்கும் வகையிலேயே பௌத்த மதத்தின் உயர்நிலை தலைவர்களின் கருத்துக்களும் வெளிப்பட்டு வந்துள்ளன. இந்த வகையிலேயே பௌத்த மத பீடங்களைச் சேர்ந்த மதத்தலைவர்கள் புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அவசியமில்லை. வேண்டுமானால் இருக்கின்ற அரசியலமைப்பில் சில திருத்தங்களைச் செய்யலாம் என எற்கனவே கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள். இந்தக் கருத்தை கண்டி அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த தேரர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் பகிரங்கமாக உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.
அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த தேரர்கள், தாங்கள் நாட்டின் முக்கிய மதத் தலைவர்களாக இருப்பதன் காரணமாகவே வேற்று மதம் ஒன்றைச் சேர்ந்தவரும், இந்த நாட்டின் சக பிரஜைகளாகிய தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு மாகாண முதலமைச்சருமாகிய விக்னேஸ்வரன் தங்களைச் சந்தித்து ஆசி பெறவும், அரசியல் ரீதியான முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுக்கள் நடத்தவும் வந்துள்ளார் என்பதை, அதன் உள்ளார்ந்த நிலையில் புரிந்து கொள்ளவில்லை. அல்லது அவர்கள் அவ்வாறு புரிந்து கொள்வதற்கு விரும்பியிருக்கவில்லை.
மதத் தலைவர்கள் என்போர் கருணையும், இரக்கமும் மிகுந்தவர்களாக, தம்டை நாடி வருபவர்களுடைய கஸ்டங்களையும், துன்பங்களையும், மன ஆதங்கங்களையும் பொறுமையாகச் செவிமடுப்பவர்களாக இருப்பார்கள் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும். ஆனால், வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்களுடைய வரலாற்றிலேயே முதல் தடவையாக கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரைச் சந்திப்பதற்காகச் சென்ற போதிலும், அவரால் அவரைத் தனிப்பட சந்திக்க முடியவில்லை. ஏனைய தேரர்களையும் உள்ளடக்கி இடம்பெற்ற அந்தச் சந்திப்பானது, பொதுவான எதிர்பார்ப்புக்கு அப்பால் சங்கடமான உணர்வை ஏற்படுத்தத் தக்க வகையில் அமைந்திருந்தது என்பது கவலைக்குரியது.
இருப்பினும் அந்த சங்கடமான ஒரு நிலையிலும், முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளையும், அவரகளுடைய அரசியல் அபிலாசைகளையும், அரசியல் தீர்வு தொடர்பிலான அவர்களுடைய எதிர்பார்ப்பையும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கருக்கு மட்டுமல்லாமல், அந்த பீடத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட தேரர்களுக்கு எடுத்துக் கூறிவிட்டுத் திரும்பியிருக்கின்றார்.
நாட்டின் தேசிய சிறுபான்மை இனமக்களின் மீது, சிங்கள பேரினவாத சக்திகள் கொண்டுள்ள இன மத ரீதியான மேலாதிக்க சிந்தனைப் போக்கில் சிறிதளவேனும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் ஆரம்ப முயற்சியாகவே வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கண்டி மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கான விஜயம் அமைந்திருக்கின்றது.
அடிப்படையில் மாற்றம் அவசியம்
தேசிய சிறுபான்மை இன மக்களின் இனத்துவ மற்றும் மத ரீதியான சுதந்திரத்தை மறுத்துச் செல்கின்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் போக்கில் கொள்கை ரீதியில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம். இந்த நாடு பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு. பல மதங்களைப் பின்பற்றுகின்ற இனக் குழுமங்கள் இந்த நாட்டைத் தமத தாய்நாடாகக் கொண்டிருக்கின்றார்கள். எனவே எல்லோரும் இணைந்து வாழ வேண்டும் என்ற தேசியப் பற்றும், ஐக்கியமும் கொண்டதோர் அரசியல் சிந்தனை இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்களாகிய பௌத்த சிங்கள மக்களுடைய மனங்களில் எழ வேண்டும்.
அத்தகைய கொள்கை ரீதியான மாற்றமும், சிந்தனை மாற்றமும் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டியது அவசியம். மோசமான ஒரு யுத்தத்தின் பின்னர், நாட்டின் மக்கள் அனைவரும் உளரீதியாக ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த நாடு முன்னேற்றமடைய முடியும்.
பேரினவாதப் போக்கைக் கொண்டுள்ள தலைவர்களும், சுயநலவாதிகளும் சாதாரண சிங்கள மக்களைத் தங்களுடைய வழியில் திசைதிருப்பி, சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான ஒரு கொள்கைப் போக்கில் செல்வதைத் தடுப்பதற்கு புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும், கொள்கை வகுப்பாளர்களும் முயற்சிக்க வேண்டும். அதேவேளை, சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களும் இந்த முயற்சியில் இறங்க வேண்டும். அந்த முயற்சி அரசியல் ரீதியாக மட்டும் இருக்க வேண்டும் என்பதல்ல. எந்தெந்த வகைகளில் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் அந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் சாதாரண மக்களுடைய மனங்களில், தாங்கள் இந்த நாட்டவர்கள், இந்த நாடு எமது தாய்நாடு, சக இனத்தவர்கள் எமது சகோதரர்கள் என்ற சிந்தனை ஆழமாகப் பதிய வேண்டும். இன ரீதியான மத ரீதியான வெறுப்புணர்வும், வேற்றுமை மற்றும் பகை உணர்வும் மறைய வேண்டும். அதற்கான முயற்சிகளும் நீண்டகால அடிப்படையிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கண்டி பௌத்த மத பீடங்களுக்கான விஜயம் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிக்குரிய ஒரு பிள்ளையார் சுழியாக அமைய வேண்டும்.
இலங்கையைப் பொருத்தமட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதமே, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் அரசியல் மூலதனமாகும். இனவாதம் மட்டுமல்லாமல் அப்போதைக்கு அப்போது தேவைக்கு ஏற்ற வகையில் சிறுபான்மை இனமக்களுக்கு எதிராக மதவாத்தையும் அவர்கள் தாராளமாகக் கையில் எடுத்துக்கொள்வார்கள்.
இனவாதத்தைப் பயன்படுத்தியே சிங்கள அரசியல் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் இதுகால வரையிலும் அரசியல் நடத்தி வந்துள்ளார்கள். இனவாதம் இல்லாவிட்டால் அவர்களால் அதிகாரத்தைக் கைப்பற்றவோ ஆட்சி நடத்தவோ முடியாது என்பதே வரலாற்றுப் பதிவாகும்.
இனவாத அரசியல் போக்கின் காரணமாகவே, இந்த நாடு முப்பது வருடங்களாக ஒரு மோசமான யுத்த்த்திற்கு முகம் கொடுக்க நேர்ந்தது. யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் கழிந்துவிட்ட போதிலும், யுத்தம் தந்த படிப்பினையைக் கொண்டு நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியாதிருப்பதற்கு இனவாதமும் மதவாதமும் அரசியலில் கோலோச்சுவதே முக்கிய காரணமாகும். இனரீதியாக மக்கள் பிளவுபட்டுக் கிடப்பதுவும் நாட்டின் பின்னடைவுக்கு மறறுமொரு காரணமாகும்.
எனவே, மோசமானதோர் இனவாத அரசியல் போக்கிற்கு எதிராக சிறுபான்மை இனமக்கள் போராட வேண்டிய கட்டாய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே, சிறுபான்மை இன மக்களின் தலைவர்கள் பேரினவாதத்தின் இவாத அரசியல் போக்கை முறியடிப்பதற்கான வழிகளில் கவனம் செலுத்துவதன் ஊடாகவே பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வைக் காண முடியும்.
சிங்கள மக்களினதும், பௌத்த மதத் தலைவர்களினதும் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பிரசாரச் செயற்பாடுகள், கருத்துருவாக்கச் சந்திப்புக்கள், கருத்துப் பரிமாற்றங்கள் என்பவற்றுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சிறுபான்மை இன மக்களின் தலைவர்கள் முன்வர வேண்டும்.
இது வடமாகாண முதலமைச்சருடைய கண்டி விஜயத்தின் வெளிப்பாடுகளில் ஒரு முக்கிய விடயமாகும்.