இந்தியப் பெருங்கடலில் வலுவடைந்து வரும் அதிகாரப் போட்டி!

683 0

இந்திய மாக்கடல் மீதான தலையீட்டை சீனா தொடர்ந்தும் விரிவுபடுத்தி வரும் நிலையில், இப்பிராந்தியத்தின் தலைமைப் பொறுப்பைத் தன் வசம் தக்கவைத்திருப்பதற்கான நகர்வுகளில் இந்தியா ஈடுபடுகிறது. இந்த நோக்கத்திற்காக, இந்தியா கடல் சார் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து தனது கடல் நடவடிக்கைகளுக்கான வலைப்பின்னலைப் பலப்படுத்தி வருகிறது.

IORA  போன்ற தனது பிராந்திய நிறுவகங்களுக்கு இந்தியா புத்துயிர் அளித்துள்ளதுடன் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய சவால்களைக் கலந்துரையாடுவதற்கான தளங்களையும் உருவாக்கி வருகிறது. இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகவே  கொழும்பில் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் இந்திய வெளிவிவகார அமைச்சர், சிறிலங்கா அதிபர், சிறிலங்கா பிரதமர் மற்றும் சிஷெல்ஸ், அவுஸ்ரேலியா, யப்பான், பங்களாதேஸ், சிங்கப்பூர் மற்றும் ஏனைய நாடுகளின் மூத்த பிரதிநிதிகள் போன்றோர் உரையாற்றும் போது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இந்தியா பலமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதற்கான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்திய மாக்கடலை தற்போதும் இந்தியாவே தலைமை தாங்குகிறது என்பதையும் இன்றுவரை செயற்படு நிலையில் உள்ள ஒரு நாடாக இந்தியா விளங்குகின்றது என்கின்ற செய்தியும் இக்கருத்தரங்கின் குறியீட்டுச் செய்தியாகக் காணப்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு மற்றும் இதையொத்த பல்வேறு கருத்தரங்குகள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பூகோள – அரசியல் மாற்றங்களின் மூலம் இடம்பெறுகின்றன.

இந்தியக் கடற்படையினரின் கடல் நடவடிக்கைகளுக்கான பிரதான இடமாகக் காணப்படும் இந்தியப் பெருங்கடலானது அண்மைய ஆண்டுகளில் பூகோள-அரசியலில் பெருமளவில் அமைதி காத்து வந்துள்ளது. ஆனால் தற்போது இப்பெருங்கடலானது முக்கிய மூலோபாய மையமாக மீளவும் எழுச்சியுற்று வருகிறது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ மற்றும் வர்த்தக விரிவாக்கமானது (குறிப்பாக அதிபர் ட்ரம்பின் ஆட்சியின் கீழ் அமெரிக்காவில் இடம்பெறும் நிச்சயமற்ற விடயங்கள்) பூகோள அரசியல் மாற்றத்தின் மீள்எழுச்சிக்குக் காரணமாக உள்ளது.

IOC-colombo (2)

வடக்கில் டொக்லம் எல்லைப் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினை மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவாக்கம் போன்றன அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மத்தியிலும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க போட்டியை உருவாக்கியுள்ளது. BRICS உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்குப் பயணம் செய்த போதிலும் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவானது தொடர்ந்தும் முறுகல் நிலையிலேயே காணப்படுகிறது.

இவ்விரு நாடுகளும் இராணுவ மோதல் ஏற்படுமளவிற்குச் செல்வதை விரும்பமாட்டார்கள் எனினும் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவுநிலையானது தொடர்ந்தும் அவநம்பிக்கை நிறைந்ததாகவே காணப்படும்.

சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில்  பல்வேறு போட்டிகள் நிலவுகின்றன. புதுடில்லி மூலோபாய வர்த்தகச் செயற்பாடுகளில் பின்னடைவைக் கொண்டுள்ள அதேவேளையில், இந்தியப் பெருங்கடலில் நிலவும் இந்தியக் கடற்படையின் அதிகாரத்துடன் சீனாவால் இன்னமும் போட்டியிட முடியவில்லை.

எனினும், சீனாவின் கரையோரப் பிரசன்னமானது வெளிப்படையாக முன்னேறி வருகிறது. சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை, சீனாவின் முதலாவது வெளிநாட்டுத் தளம் டிஜிபோட்டியில் அமைக்கப்பட்டுள்ளமை, இந்தியப் பெருங்கடலில் சீனா தொடர்ந்தும் கடற்படைப் பயிற்சிகளில் ஈடுபடுகின்றமை போன்றன சீனா தனது கடல்சார் நடவடிக்கைகளைப் பலப்படுத்தி வருவதற்கான சில எடுத்துக்காட்டுக்களாகும்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியாவானது இந்தியப் பெருங்கடல் தொடர்பான அரசியல், இராணுவ மற்றும் இராஜதந்திர நகர்வுகளை மீளவடிவமைத்துச் செயற்படுத்தி வருகிறது.

மே 2017ல் இடம்பெற்ற ஒரு அணை மற்றும் ஒரு பாதை அரங்கில் கலந்து கொள்ளாது அதனைப் புறக்கணித்ததன் மூலம் சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.  இவ்வாறான புதிய பாதைகளை அமைக்கும் போது பூகோள ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துலக விதிமுறைகள், நல்லாட்சி, சட்ட ஆட்சி, வெளிப்படைத்தன்மை, சமத்துவம் போன்ற பல விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறிப்பாக இவ்வாறான திட்டம் ஒன்றை மேற்கொள்ளும் போது தக்கவைத்துக் கொள்ள முடியாத கடன் சுமைகளைத் தவிர்ப்பதற்கான நிதி சார் பொறுப்புக்கூறல் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். அத்துடன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்றவையும் மதிக்கப்பட வேண்டும்.

IOC-colombo (4)

சீனாவின் தலைமையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்யவில்லை என்பதையே இந்தியாவின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எதுஎவ்வாறிருப்பினும், இந்தியா, சீனாவின் திட்டங்களை எதிர்ப்பதால் இது தொடர்பில் இந்தியா மாற்று வழிமுறைகளைக் கூறவேண்டும் என்கின்ற சீனாவின் அழுத்தத்திற்கும் ஆளாகுகின்றது.

இந்தியப் பெருங்கடலின் கரையோரங்களில் அமைந்துள்ள நாடுகள் மத்தியில் பிராந்தியவாத உணர்வைப் புதுப்பிப்பதில் இந்திய அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஒற்றுமை மற்றும் அடையாளம் ஆகியவற்றை உருவாக்க வேண்டிய தேவையுள்ளதாக கடந்த ஆண்டு இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்தியாவின் வெளிவிகாரச் செயலர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு புதிய பாதை இணைப்புத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜெய்சங்கர் உரையாற்றியதைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு புதிய இணைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. நவம்பர் 2016ல், ஆசியாவை கரையோர இடைவழியின் ஊடாக ஆபிரிக்கா வரை இணைப்புச் செய்வது தொடர்பாக இந்தியாவும் யப்பானும் திட்டம் ஒன்றை வரைந்தன. இதற்கமைவாக இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஆசிய-ஆபிரிக்க வளர்ச்சி நடைகூடம் ஒன்று உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஈரானியத் துறைமுகமான சபஹாரை இந்தியாவும் யப்பானும் இணைந்து அபிவிருத்தி செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் பிராந்திய கட்டுமான அபிவிருத்தி தொடர்பாக அயல்நாடுகளான பங்களாதேஸ், சிறிலங்கா போன்றவற்றுடனும் இந்தியா கலந்துரையாடி வருகிறது.

இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் மீது சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான போட்டி மேலும் வலுவடைந்து வருவதால் இந்தியா வினைத்திறன் மிக்க கோட்பாடுகளை உருவாக்குவதை விரைவுபடுத்திக் கொள்ளவுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதிலும் புதுடில்லியின் அண்மைய முயற்சிகள் வரவேற்கப்பட்டுள்ள அதேவேளையில், சீனாவின் வேகத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவின் வேகம் போதியதற்றதாக இருக்கலாம்.

வழிமூலம்       – lowyinstitute.org
ஆங்கிலத்தில் – Darshana Baruah
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a comment