காணாமல் போனோர் பணியகத்திற்கு நம்பகமான ஆணையாளர்களை நியமிக்க வேண்டும் – மேற்குலக நாடுகள்!

252 0

காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள மேற்குலக நாடுகள், இந்தப் பணியகத்துக்கு நம்பகமான ஆணையாளர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

காணாமல் போனோர் பணியகத்தை செப்ரெம்பர் 15ஆம் நாள் தொடக்கம் செயற்படுத்தும், வர்த்தமானி அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் வெளியிட்டார்.

இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா உள்ளிட்ட நாடுகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில் அவர், “நல்லிணக்கத்துக்கான முன்நோக்கிய முக்கியமான நகர்வு. நன்கு நிதியளிக்கப்பட்ட, வலுவான, சுதந்திரமான , நன்கு தகுதியான ஆணையாளர்களுடன் செயற்படும் காணாமல் போனோர் பணியகம், பதில்களைத் தேடும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த குடும்பங்களுக்கும் நம்பிக்கையை அளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, “காணாமல் போனோர் பணியகம் செயற்படத் தொடங்குவது, வரவேற்கத்தக்க, முக்கியமான ஒரு நடவடிக்கை. நம்பகமான ஆணையாளர்களை விரைவாக சேர்த்துக் கொள்ள முடியும்” என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

“இது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முக்கியமான, சாதகமான நகர்வு. அடுத்தகட்டம், ஆணையாளர்கள் மற்றும் செயற்படுதல்”  என்று கனடா தெரிவித்துள்ளது.

Leave a comment