நாயாத்து வழி பகுதியில் வீதிக்கு அருகில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த ‘புனித அந்தோனியார்’ திருச் சொரூபம் உடைப்பு

371 0
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் வீதிக்கு அருகாமையில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியார் திருச் சொரூபம் இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட, அடம்பன் பொலிஸ் பகுதியில் உள்ள நாயாற்று வழி பிரதான வீதிக்கு அருகில் சுமார் நான்கு அடி உயரத்தில் அமைக்கப்பட்டு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 அடி உயரம் கொண்ட புனித அந்தோனியர் திருச் சொரூபமே இவ்வாறு உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த விசமிகள் கண்ணாடிபெட்டியை உடைத்து உள்ளே இருந்த புனித அந்தோனியாரின் திருச் சொரூபத்தை வெளியில் எடுத்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் உடைத்து சேதமாக்கப்பட்ட அந்தோனியார் சொரூபத்தை பார்வையிட்டதோடு மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment