நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ, இன்று நிதிமோசடிகள் குறித்த காவற்துறை விசாரணைப் பிரிவில் முன்னிலையானார்.
யோசித்தவின் பாட்டியினது பெயரில் கல்கிஸ்ஸை – மிகிந்து மாவத்தையில் வீட்டுடனான காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டமை மற்றும் ரத்மலானை – கெகட்டிய பிரதேசத்தில் காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக அவர் இன்று முன்னிலையானார்.
இதன்பொருட்டு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக யோசித்தவை கடந்த 12ஆம் திகதி, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் மாற்று தினம் ஒன்றை கோரி இருந்தார்.
இதன்படி இன்றையதினம் அவர் குறித்த காவற்துறைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
அதேநேரம் எதிர்வரும் 20ஆம் திகதி யோசித்தவின் பாட்டியாரிடம் குறித்த காணி கொள்வனவுகள் குறித்த மேலதிக வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள நிதிமோசடி குறித்த காவற்துறை விசாரணைப் பிரிவு நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளது.