யாழில் ஊடகவிலாளரின் வீட்டில் 40 பவுன் தங்க நகை திருட்டு

258 0

யாழ். வடமராட்சி உடுப்பிட்டி தெற்கு பதினாறாம் கட்டைப் பகுதியில் ஊடகவியலாளரொருவரின் வீட்டின் யன்னலை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 40 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளர்களான ஊடகவியலாளர் மற்றும் அவரது மனைவியும் வேலைக்கு சென்ற பின்னர் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேலை முடிந்து வீட்டிற்குச் சென்ற வீட்டின் உரிமையாளரான பெண்மணி வீட்டின் யன்னல் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளார். அதனையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டுள்ளனர்.

அதன் பின்னர் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டு அறையினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 40 பவுன் தங்க நகைகள் களவாடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத் திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment