அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் செயல்பட்டுவரும் ஒரு மேல்நிலைப் பள்ளியில் மர்மநபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியின் மூலம் அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டுள்ளான். இந்த சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த தகவல் பரவியதும் அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் அப்பள்ளிக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்த தகவலை அப்பகுதியின் தீயணைப்புத்துறை அதிகாரியும் உறுதிசெய்துள்ளார். பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணமடைந்தார், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.