மோடி உடை பற்றி விமர்சனம்: குமரிஅனந்தனுக்கு தமிழிசை பதிலடி

253 0

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் பிரதமர் மோடி உடை பற்றி விமர்சனம் செய்துள்ளார். இதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், “குஜராத்தில்தான் காந்தியும் பிறந்தார். மோடியும் பிறந்தார். காந்தி நாட்டுக்காக சட்டை அணியாமல் நடந்தார். ஆனால் மோடி தினமும் 5 உடை மாற்றுகிறார். ஒவ்வொன்றும் பல லட்சம் விலை உள்ளது” என்று கடுமையாக விமர்சித்தார்.

தி.க. தலைவர் வீரமணி பேசும்போது, “குமரிஅனந்தன் தமிழை சொல்லிக் கொடுத்த அளவுக்கு தமிழிசைக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கவில்லை போலும். அதனால்தான் நீட் தேர்வினால் மருத்துவ மாணவர் சேர்க்கை பற்றி தவறான கணக்கை சொல்கிறார்” என்றார்.

இதற்கு பதிலளித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கூறியதாவது:-

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எனது தந்தை (குமரிஅனந்தன்) கதர் ஆடையை தவிர வேறு ஆடை அணிவதில்லை. கதர் ஆடைக்கு முழு வரி விலக்கு அளித்து மோடி ஊக்கப்படுத்தியதால் 60 சதவீதம் கதர் விற்பனை அதிகரித்துள்ளது.

நேற்று ஆமதாபாத் வந்த ஜப்பான் பிரதமரை முதலில் காந்தியின் சபர் மதி ஆசிரமத்துக்குத்தான் அழைத்து சென்றிருக்கிறார். கதர் ஆடையை ஜப்பான் பிரதமர் அணிந்து இருக்கிறார்.

பிரதமரின் உடை விசயத்தை கொச்சைப்படுத்துவது சரியல்ல. எனது தந்தை ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர் என்ற நிலையில் பேசி இருக்கலாம். ஆனால் மனசாட்சிப் படி பேச வேண்டும்.

பெரியவர் வீரமணி எனக்கு கணக்கு தெரிய வில்லை என்று சொல்லியிருக்கிறார். உண்மைதான் 2ஜியில் எத்தனை பூஜ்யங்கள் என்ற கணக்கு எனக்கு தெரியாது. அப்படிப்பட்ட கணக்கை எனக்கு சொல்லித் தரவும் இல்லை.

ஆனால் இன்னொரு கணக்கை என்னால் சொல்ல முடியும். கடந்த ஆண்டு நீட் தேர்வுக்காக பலர் சி.பி.எஸ்.சி. நோக்கி சென்றார்கள்.

கடந்த ஆண்டு அரியலூரில் 2 மாணவர்களுக்கு மட்டும் தான் மருத்துவத்தில் சீட் கிடைத்தது. இந்த ஆண்டு 21 பேருக்கு கிடைத்து இருக்கிறது. திருவாரூரில் 28 பேருக்கு கிடைத்துள்ளது. 25 மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகமாக இடம் கிடைத்துள்ளது.

பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். ஆனால் இதையெல்லாம் மறந்தோ அல்லது மறைத்தோ நீங்கள்தான் தப்பு கணக்கு போடுகிறீர்கள். மக்கள் திருத்துவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment