சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி காதர் பாட்ஷா அதிரடி கைது

251 0

தமிழகத்தில் இருந்து பழமையான சிலைகளை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தியத வழக்கில் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி காதர் பாட்ஷா கும்பகோணத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் இருந்து பழைமையான ஐம்பொன் சிலைகளை கடத்தி வெளி நாடுகளுக்கு விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் கும்பல் பல ஆண்டுகளாகவே கைவரிசை காட்டி வருகிறது.

அரிய பொக்கி‌ஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டிய இந்த சிலைகளுக்கு வெளி நாடுகளில் மவுசு அதிகம். இங்கு சில லட்சங்களில் விலை பேசப்படும் சாமி சிலைகள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விற்பனையாகிறது. சர்வதேச அளவில் பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து சிலை கடத்தல் கும்பல் செயல்படுவது சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் அம்பலமானது.

கிண்டியில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் சிலை கடத்தலை தடுப்பதற்கு தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. சிலை மற்றும் கடத்தல் பிரிவு ஐ.ஜி.யாக பொன்மாணிக்கவேல் பதவியேற்ற பின்னர் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட ஐம்பொன் சாமி சிலைகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன. சர்வதேச கடத்தல் மன்னனான சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவை சேர்ந்த இவர் சிலை கடத்தலில் ஈடுபட்டு கோடிகளில் புரண்டது அம்பலமானது. இவனது கூட்டாளிகளான தீனதயாளனின் ஆழ்வார்பேட்டை வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காதர்பாஷா, போலீஸ்காரர் சுப்புராஜ் ஆகியோருக்கு இதில்  தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே, காதர் பாஷா டி.எஸ்.பி.ஆக பதவி உயர்வு பெற்று வேறு பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

இவ்விவகாரம் வெளிவந்த உடன் அவர் உஷாராகி தலைமறைவாகி விட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சுப்புராஜை கைது செய்து காதர் பாட்சாவை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று கும்பகோணத்தில் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் தலைமறைவாகி இருந்த காதர் பாஷாவை அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட காதர் பாஷா நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி சிறையில் இன்று அதிகாலை 4 மணிக்கு அடைக்கப்பட்டார்.

Leave a comment