ஜெயலலிதா நினைவிடம் கட்ட வடிவமைப்பு தயாராகிறது: 1 வருடத்தில் கட்டி முடிக்க ஏற்பாடு

317 0

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் கட்ட வடிவமைப்பு தயாரிக்கப்பட்டு ஒரு வருடத்தில் நினைவிடம் அமைக்கும் பணி முடிவடையும். இதற்கு தமிழக அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர்.-அண்ணா நினைவிடங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.இங்கு தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் வந்து பார்வையிட்டும், அஞ்சலி செலுத்தியும் செல்கிறார்கள்.

தற்போது இங்கு தற்காலிகமாக நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை புதிய வடிவமைப்புடன் கூடிய நினைவிடமாக கட்டப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார்.இதையடுத்து நினைவிடம் கட்டும் பணியை தமிழக அரசின் பொதுப்பணித்துறை விரைவில் தொடங்க உள்ளது. நினைவிடத்துக்கான வடிவமைப்பு மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான டெண்டர் விடப்பட்டதில் 10-க்கும் மேற்பட்ட மாதிரிகள் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில் சிறந்த வடிவமைப்பு மாதிரியை தேர்வு செய்ய சி.எம்.டி.ஏ., முதன்மை திட்ட வடிவமைப்பாளர், பொதுப் பணித்துறை முதன்மை என்ஜினீயர், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிட வடிவமைப்பு பயிற்சி மற்றும் திட்டமிடல் கட்டிடகலை முதல்வர் ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்கிறது.

இவர்கள் தேர்வு செய்யும் வடிவமைப்பு மாதிரியானது கடலோர பகுதி ஒழுங்கு முறை விதிக்கு உட்பட்டதாக இருக்கும், நினைவிடத்தின் வடிவமைப்பு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். 5 முதல் 6 மாதங்களில் இந்தப் பணிகள் நிறைவடையும்.

அதன்பிறகு கட்டு மானப்பணிகள் தொடங்கும். எம்.ஜி.ஆர். நினைவிடத்தை ஒட்டியே ஜெயலலிதா நினைவிடமும் அமைக்கப்படும். ஒரு வருடத்தில் நினைவிடம் அமைக்கும் பணி முடிவடையும். இதற்கு தமிழக அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் 64 நினைவிடங்கள் உள்ளது. இவற்றை தமிழக அரசின் மக்கள் தொடர்புத் துறை பராமரித்து வருகிறது. இதில் சென்னையில் மட்டும் பல்வேறு தலைவர்களின் 14 நினைவிடங்கள் உள்ளது.

Leave a comment