யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் நடைபெற்றது. அதன்போதே பொலிஸார் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்களுமே உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றப்புலனாய்வு பிரிவினரது விசாரணைகளின் அடிப்படையில் சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி ரவைகளின் வெற்றுதோட்டாக்கள் மீட்கப்பட்டிருந்தன.
சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பொலிஸ் நிலையத்தின் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டனர்.
அவர்கள் கடந்த 11 மாதங்களாகத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.