முல்லைத்தீவு ஒலுமடு கிராமத்தில் வன்னியில் இடம் பெற்ற இறுதிக்கட்ட போரின்போது தாய் ,தந்தையினை இழந்த நிலையில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் திடீரென மயங்கி விழுந்து நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் பரிதாபகரமாக உயிரிழந்தான்.
குறித்த சம்பவத்தில் கனகலிங்கம் – பிரதாபன் வயது – 13, என்னும்
ஒலுமடு தமிழ் வித்தியாலயத்தில் தரம் 07, இல் கல்வி பயின்று வந்த சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது,
வன்னியில் இடம் பெற்ற இறுதிக்கட்ட போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் எறிகணை வீச்சின் காரணமாக தாயையும், தந்தையையும் இழந்த நிலையில் ஒலுமடு சிங்கன் வீதியில் மாமனாருடன் தங்கியிருந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவனாவான்.
குறித்த சிறுவனுடைய மாமியார் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்து வர வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனித்து இருந்த சிறுவன் வாயினாலும், மூக்கினாலும் குருதி வெளியேறிய நிலையில் திடீரென மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.
நீர் எடுக்கச் சென்ற சிறுவனுடைய மாமியார் தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பி வந்த போது சிறுவன் மயங்கி இருந்ததைக் கண்டு அயலவர்களின் உதவியுடன் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சிறுவனைக் கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுவனை பரிசோதனை செய்த வைத்தியர் ஏற்கனவே சிறுவன் உயிரிழந் துள்ளதாக தெரிவித்துள்ளார். இன் நிலையில் சிறுவன் என்ன காரணத்தால் உயிரிழந்துள்ளான் என்பது தொடர்பில் கண்டு பிடிப்பதற்காக பிரேத பரிசோதனை நடவடிக்கைகளை மேற்க் கொள்வதற்காக வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சடலத்தை ஒப்படைக்கவுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.