மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமையால் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினையை தடுக்கும் வகையில், மாற்று நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை மகளிர் அமைப்புக்கள் இணைந்து மட்டக்களப்பு கல்லடி, உப்போடை பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்திற்கு முன்பாக நடாத்தின.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கழிவுகள் அகற்றப்படாத காரணத்தினால் பாரிய சுகாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டுப்பட்டுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், அதற்கான மாற்று நடவடிக்கைகளை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை எனவும் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
தற்போது மழை காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் குப்பைகள் அகற்றப்படாவிட்டால் பாரிய சுகாதார பிரச்சினைகளை பொது மக்கள் எதிர்நோக்க வேண்டும் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வீதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக அதன் வழியாக பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.