கடல் சூழலுக்கும், கடல் வளங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் இழுவை மடி கொண்டு மேற்கொள்ளப்படும் மீன் பிடி முறமையினை தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக பாராளுமன்றம் ஊடக சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் இன்று வரை குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் இதனால் உள்ளூரில் உள்ள மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்ட மூலத்தை நடை முறைப்படுத்துவதில் கால தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் எதிர்காலத்தில் இழக்கப்படப்போவதை இத்தொழிலை நியாயப்படுத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிறைவேற்றப்பட்ட இழுவை மடிச்சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த கடற்தொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் வெளிநாட்டுப் படகுகளுக்கான ஒழுங்கு விதிச் சட்ட திருத்தத்திற்கு தற்போது சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதால் அச்சட்டத்தை விரைவாக பாராளுமன்றில் நிறைவேற்றியதன் பிற்பாடு இந்திய தரப்புடனான மீனவர் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறும் ஏற்கனவே விடுவிக்க இணங்கப்பட்ட படகுகள் போக மீதமாக இருக்கும் படகுகளுக்கு இச்சட்டம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதனையும் வடமாகாண மீனவர்கள் சார்பில் தாம் கேரிக்கை விடுவதாக கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.எம்.ஆலம் தெரிவித்தார்.
தமது கோரிக்கை அடங்கிய மகஜர் கடற்தொழில் அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.