சேலம் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை – விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

442 0

201608171227259805_Rs-6-crore-robbery-in-salem-train-Inquiry-report-submission_SECVPFசேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.6 கோடி கொள்ளைபோன சம்பவத்தின் விசாரணை அறிக்கை போலீஸ் கமி‌ஷனரிடம் சமர்பிக்கப்பட்டது.

சேலத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி சென்னை சென்ற எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.6 கோடி ரெயில் கூரையை அறுத்து மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் ஏ.டிஜி.பி. கரன்சின்கா தலைமையில் போலீஸ் சூப்பிரெண்டுகள் நாகஜோதி, ராஜேஸ்வரி மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சேலம் மாநகர போலீசார் என பல குழுக்களாக பிரிந்து விசாரித்து வருகிறார்கள்.

கடந்த 4 நாட்களாக சேலம் ஜங்சன் ரெயில் நிலையம், சேலம் டவுன் ரெயில் நிலையம், ஆத்தூர் ரெயில் நிலையம், விருத்தாசலம் ரெயில் நிலைய ஊழியர்கள், பார்சல் அலுவல ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், போர்ட்டர்கள், டீ, காபி விற்பவர்கள், உள்பட பலரை அழைத்து விசாரித்தனர்.

பணப்பெட்டி சென்ற எழும்பூர் எக்ஸ்பிரெஸ் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் சிலரிடமும் விசாரணை நடந்தது. ஆனால் இது வரை எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகிறார்கள்.

பணப்பெட்டி பாதுகாப்புக்கு சென்ற சேலம் மாநகர உதவி ஆணையர் நாகராஜன் உள்பட 9 பேரிடமும் சிறப்பு புலனாய்வு அதிகாரியான அமித்குமார் சிங் விசாரித்தார். 9 பேரும் தெரிவித்த தகவல்களை பதிவு செய்த அவர் அதனை அறிக்கையாக தயார் செய்து சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே சேலம் மாநகர துணை கமி‌ஷனர் செல்வராஜ், உதவிகமி‌ஷனர் நாகராஜன் உள்பட 9 பேரிடமும் விசாரித்தார். இவரும் விசாரணை அறிக்கையை சேலம் போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமாரிடம் சமர்பித்துள்ளார். இதனால் உதவி கமி‌ஷனர் நாகராஜன் உள்பட 9 பேர் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

சேலம் ஜங்சன் மற்றும் டவுன் ரெயில்நிலைய பிளாட் பாரங்களில் அதிகாலை நேரத்திலும், மாலை வேளைகளிலும் முதியவர்களும், சர்க்கரை நோயாளிகளும் ஏராளமானோர் சமீப காலமாக நடை பயிற்சி சென்று வந்தனர்.

இந்த நிலையில் சேலத்தில் இருந்து சென்ற ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளைப்போனதால் இந்த பிளாட்பாரங்களில் நடைபயிற்சி செல்ல கூடாது என அதிகாரிகள் மூலம தற்போது திடீர் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.