முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல் – புருஜோத்மன் தங்கமயில்

481 0

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுத்தூபி அமைப்பது தொடர்பிலான தனிநபர் பிரேரணையொன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவால் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணை மீதான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே, பொது நினைவுத் தூபியினை அநுராதபுரத்தில் அமைக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன அறிவித்திருக்கின்றார். அத்தோடு, ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை பொது நினைவு தினமாக கொள்ள முடியும் என்றும் அவர் பரிந்துரைத்திருக்கின்றார்.

நினைவு கூருவதற்கான அடிப்படைக் கடப்பாடுகள் மீதும், மனித உரிமைகள் மீதும் தொடர்ச்சியாக ஏறி நின்று நர்த்தனமாடி வருகின்ற இலங்கை அரசாங்கமும், அதன் பாதுகாப்பு அமைச்சும் யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுத் தூபியை அமைப்பது தொடர்பில் இணக்கம் வெளியிட்டிருப்பது ‘நல்லிணக்கத்தின் பெரும் பாய்ச்சல்’ என்று யாராவது புளகாங்கிதம் அடையக்கூடும். அதுவும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களின் போது அரச மற்றும் அரச சார்ப்புத் தரப்புக்கள் அதனை பிரதான விடயமாகவும் எடுத்துச் செல்லக்கூடும்.

தார்மீக அறம் தாண்டி தந்திரமான செயற்பாடுகளை முன்வைப்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அவர் வளர்த்தெடுக்கும் அரசியல் வாரிசுகளும் முதன்மையானவர்கள். அதில், ருவான் விஜயவர்த்தன அண்மைய வரவு. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்தாலும், பாதுகாப்பு கட்டளைப் பீடங்களுக்குள்ளும், தேசிய புலனாய்வுப் பிரிவுக்குள்ளும் ருவான் விஜயவர்த்தன படு நெருக்கமான உறவினைப் பேணுகின்றார். பல நேரங்களில் மஹிந்த ராஜபக்ஷ காலத்து கோத்தபாய ராஜபக்ஷவை நினைவுபடுத்தவும் செய்கிறார். கூட்டு அரசாங்கத்தின் தலைமைக் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாப்பு பீடங்களுடனான உறவை மிக வலுவாக வைத்துக் கொள்வது தொடர்பில் இயங்குவது இயல்பானது. அதன்போக்கிலேயே மைத்திரிபால சிறிசேனவைத் தாண்டி, பாதுகாப்புப் பீடங்களுக்குள் ஆளுமை செலுத்தக்கூடிய நபராகவும் தன்னுடைய நம்பிக்கைக்குரியவராகவும் ருவான் விஜயவர்த்தனவை ரணில் விக்ரமசிங்க முன்னிறுத்தியிருக்கின்றார். அப்படியான நிலையில், இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சு என்கிற நிலையில் மைத்திரிபால சிறிசேனவை மாத்திரமல்ல, ருவான் விஜயவர்த்தனவையும் பெரும் கவனத்தோடு நோக்க வேண்டிய தேவை தமிழ்த் தரப்புக்களுக்கு உண்டு.

ஏனெனில், பல நேரங்களில் மைத்திரிபால சிறிசேனவினதும், இராணுவத் தளபதிகளினதும் முகத்தை முன்னிறுத்திக் கொண்டு படு பயங்கரமான வேலைகளை ரணில் விக்ரமசிங்கவும், ருவான் விஜயவர்த்தனவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதன்போக்கிலேயே, பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பது தொடர்பிலான பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையையும் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. அத்தோடு, ரணில் விக்ரமசிங்க மேற்கு நாடுகளுடன் பெரும் நட்பும் இணக்கமும் கொண்டிருக்கின்ற போதிலும், இலங்கையின் இன-மத அரசியல் அதிகார பீடங்களின் பிரதான அங்கமான பௌத்த பீடங்களை அவர் என்றைக்குமே பகைத்துக் கொண்டதில்லை; தாண்டியும் சென்றதில்லை. அந்த அடிப்படைகளிலிருந்தும் அனைத்தையும் நோக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

“நினைவுத் தூபியானது பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். அதாவது, பொது மக்கள் செல்லக் கூடியதாகவும், பாதுகாப்பான இடமாகவும் அது இருக்க வேண்டும். மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்திருப்பதால் சகலருக்கும் பொதுவான இடமாக அநுராதபுரம் அமையும்.” என்று தன்னுடைய விளக்கத்தினை ருவான் விஜயவர்த்தன முன்வைத்திருக்கின்றார்.

வடக்கு- கிழக்கு இணைப்பு வழியில் அநுராதபுரம் அமைந்திருக்கின்றது என்கிற கண்டுபிடிப்பும், அதுவே பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைக்க காரணங்களில் பிரதானமானது என்கிற வாதமும் நகைப்புக்குரியது. அத்தோடு, எல்லோரும் சென்றுவரக் கூடிய பாதுகாப்பான இடமாக அநுராதபுரமே இருக்கின்றது என்கிற செய்தியினூடு நாட்டின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரா ருவான் விஜயவர்த்தன முன்வைக்கும் வாதம் எவ்வகையானது? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், வடக்கு- கிழக்கு இன்னமும் பாதுகாப்பு அச்சுறுத்தலுள்ள பகுதி என்கிற விடயத்தை மறைமுகமாக முன்வைப்பதன் மூலம் அவர், வடக்கு- கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பின் நீட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார். இது வடக்கு- கிழக்கு தொடர்பிலான தென்னிலங்கையின் அணுகுமுறைகள் எந்தக் காலத்திலும் மாறுவதில்லை என்பதை மீளவும் உறுதி செய்கின்றது.

வடக்கு- கிழக்கில் முப்பது ஆண்டுகளாக நீண்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றார்கள். இதில், பெரும்பான்மையானவர்கள் பொது மக்கள். அதிலும், 90 வீதமானவர்கள் தமிழ் மக்கள். அப்படியான நிலையில், நினைவேந்தல் சார்ந்த பொது அமைவிடமொன்று தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமான வடக்கு- கிழக்கிலிருந்து அவர்களுக்கு (இன்றைக்கு) சற்றும் சம்பந்தமில்லாத அநுராதபுரம் என்கிற சிங்கள- பௌத்த பூமிக்கு நகர்த்தப்படுவது நியாயமானதா? அது, உண்மையிலேயே நினைவுகூருதலுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் செயற்பாடா? அது, வெளிப்படையாகவே நினைவுகூருதலை மறுதலிக்கும் செயற்பாடுகளின் போக்கிலானது இல்லையா?

இலங்கையின் பல பகுதிகளிலும் இராணுவத்தினருக்கான நினைவுத் தூபிகளும், போர் வெற்றி தூபிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. முள்ளிவாய்க்கால், கிளிநொச்சி தொடங்கி கண்டி வரையில் அவை நீள்கின்றன. அத்தோடு, விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக கூறப்படும் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவுகூரும் தூபிகளும், நினைவிடங்களும் புதிது புதிதாக தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் நடுப்பகுதியிலும் அப்படியான நினைவிடமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அனுராதபுரத்தில் திறந்து வைத்தார். அப்படியான நிலையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களில் 90 வீதமானவர்கள் வடக்கு- கிழக்கில் இருக்கும் போது, பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் யாருக்காக அமைக்க வேண்டும்?

நினைவு கூருதலும், அது சார் நிகழ்வுகளும் சமூகமொன்றின் ஆன்மாவோடு சம்பந்தப்பட்டது. அதுவும், விடுதலைக்கான பயணத்தை தொடருகின்ற சமூகத்துக்கு அந்த ஆன்மாவின் இருப்பு முக்கியமானது. அந்த நிலையிலேயே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதானமானதாகக் கொள்ளப்படுகின்றது. அப்படியான நிலையில், முள்ளிவாய்க்கால் கோரங்களை மாத்திரமல்ல, தமிழ் மக்களின் விடுதலை ஆன்மாவையும் அகற்றம் செய்துவிட வேண்டும் என்கிற நோக்கில்தான் நல்லிணக்கத்தின் பாய்ச்சலை அநுராதபுரத்தில் நிகழ்த்துவது தொடர்பில் ருவான் விஜயவர்த்தன கருத்து வெளியிட்டிருக்கின்றார். அத்தோடு, மே 18 என்பது ஏற்கனவே தமிழ் மக்களினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாக முன்வைக்கப்பட்ட நிலையில், அதனை ஆட்டங்காணச் செய்வதற்கான ஆரம்ப முனைப்பாகவே, மே மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையை பொது நினைவு தினமாக முன்வைப்பதனூடு நிகழ்த்தவும் முனைத்திருக்கின்றார்.

இந்த இடத்தில் வடக்கு மாகாண சபை மீதான கேள்வியொன்று எழுகின்றது. அதாவது, மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், முள்ளிவாய்க்காலில் பொது நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிற பிரேரணையை வடக்கு மாகாண சபையின் முன்வைத்து நீண்ட நாட்களாகின்றது. ஆனாலும், பொது நினைவிடத்தினை அமைப்பது தொடர்பிலான ஆரம்ப கட்டங்கள் எதனையும் காண முடியவில்லை. அதற்கான காணியையோ, நிதியையோ பெற்றுக்கொள்வது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, மே 18ஆம் திகதி மாத்திரம் வாகனங்களில் வந்து அஞ்சலித்துவிட்டுச் செல்வதோடு விடயங்கள் முடிந்துவிட்டதாக கருதுகின்றார்கள். காணி ஒதுக்கீடு அல்லது கொள்வனவு சார்ந்து இயங்குவதற்கு ஆளுநரின் அனுமதி தேவைப்படுகின்றது, மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்கிற தொடர் வாதங்களை வடக்கு மாகாண சபை முன்வைக்கலாம். ஆனால், அதனைத் தாண்டிய தொடர் அழுத்தங்களை வடக்கு மாகாண சபை விடுத்திருக்கின்றதா என்றால் அதுவும் இல்லை. வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை இறுதி செய்வது தொடர்பில் காணி ஒதுக்கீடுகளை எந்தவித இடையூறுமின்றிச் செய்து கொண்டிருக்கின்றார். ஆனால், ஒரு பொது நினைவிடத்துக்கான காணியைப் பெற்றுக் கொள்வதற்கு வடக்கு மாகாண சபையால் இன்னமும் முடியவில்லை என்பது வேதனையானது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு பருவகால நிகழ்வு என்கிற நிலையை நோக்கி தமிழ்த் தரப்பு கடத்திக் கொண்டிருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. எந்தவித பற்றுறுதியும், கூட்டுப்பொறுப்பும் இன்றி விடயங்களைக் கையாண்டு முக்கியமான கட்டமொன்றை எதிரிகளிடம் கையளித்துவிட்டு பின்னர் அழுவதால் எந்தப் பயனும் இல்லை. டக்ளஸ் தேவானந்தா கொண்டு வந்த பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அவரும், பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பது தொடர்பில் எந்த மாற்றுக் கருத்தும் இன்றி ஏற்றுக்கொண்டு நன்றியும் கூறிவிட்டார். இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபையும் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளனவா என்கிற கேள்வி எழுகின்றது. அந்தக் கேள்விக்கான பதில், ‘இல்லை’ என்று மாத்திரம் தொடர்ந்தும் அமையுமானால், அநுராதபுரம் தாண்டி அஸ்கிரிய பீடத்துக்குள் பொது நினைவுத் தூபி அமைக்கப்பட்டாலும் நாம் ஆச்சரியப்பட முடியாது.

Leave a comment