உடல்திறனை நிரூபிக்க ‘தண்டால்’ எடுத்த பாகிஸ்தான் மந்திரி முகமது புஸ் மகர் தனக்கு கொடுத்த சவாலை முறியடித்தார்.பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் விளையாட்டுத்துறை மந்திரி ஆக முகமது புஸ் மகர் (29) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவர் பதவி ஏற்றார்.
சிந்து மாகாண அமைச்சரவையில் மிக இளம் வயதான இவரிடம் அவரது உடல்திறனை சோதிக்க தண்டால் எடுக்க முடியுமா? என சக மந்திரிகள் சவால் விடுத்தனர்.
அதை தொடர்ந்து அவர்களது முன்னிலையில் 40 வினாடிகளில் 50 தடவை ‘தண்டால்’ எடுத்து தனது உடல் திறனை மந்திரி மகர் நிரூபித்தார்.
அந்த வீடியோவையும் ஆன்லைனில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அதில் அவர் பேசும் போது ‘எனது திறனை இதன் மூலம் நிரூபித்துள்ளேன். என்னை யாரும் வெல்ல முடியாது என நினைக்கிறேன்.’ என கிண்டலாக தெரிவித்தார்.
மந்திரி முகமது புல் மகர் ஒரு விளையாட்டு வீரர் ஆவார். தினமும் 2 முதல் 3 மணி நேரம் உடல் திறனை வளர்க்கும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செய்கிறார்.
இதற்கிடையே மந்திரி அபித் ஷெர் அலி மற்றொரு சவாலை விடுத்தார். 100 கிலோ எடையை தூக்க முடியுமா? என மந்திரி மகரை உசுப்பி விட்டுள்ளார். அதையும் ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இதே சவாலை நீங்கள் ஏற்க தயாரா? என அவரிடம் பதில் கேள்வி விடுத்துள்ளார். இதுவும் வீடியோ ஆக வெளியாகி உள்ளது.
இந்த பிரச்சினை குறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவரும், பஞ்சாப் சட்ட மந்திரியுமான ரானா சனா குல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், மந்திரி மகரின் இந்த நடவடிக்கை அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என கூறியுள்ளார்.