வாழைச்சேனை ஆட்டோ சாரதிகள் போராட்டம்!

335 0

மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துமாறு கோரி வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை முன்றலில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கறுவாக்கேணி பிரதேச முச்சக்கரவண்டி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள், பிரதேச மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன் உட்பட சிலர் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அன்மித்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக இரண்டு வருடங்களாக பல தமிழ் மற்றும் முஸ்லிம் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கிடையில் பிரச்சினைகள் நடைபெற்று வருகின்றன.

கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதியில் 15 பேருக்கு முச்சக்கரவண்டி தரிப்பதற்கான அனுமதி ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. பின்னர் முஸ்லிம் பகுதியில் தரிப்பிடம் வழங்கப்பட்டிருந்த 6 பேர் அங்கிருந்து பிரிந்து வந்தவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு 23 பேருக்கு குறித்த இடத்தில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தெரியப்படுத்திய போது 10.07.2017 அன்று வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சுற்றுவட்டாரத்திலிருந்து மட்டக்களப்பு பாதை தமிழ் தரப்பினர் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தை பயன்படுத்த முடியும் என தீர்மானிக்கப்பட்டது

கூட்டம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை கூட்டத்தின் தீர்மானத்தினை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்ட இறுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.சிஹாப்தீன் ஆகியோரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

Leave a comment