லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள நஷ்டஈடு மற்றும் தண்டப்பணம் என்பவற்றைச் செலுத்துவதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு நாளை மறுதினம் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
“சில்துணி சிறைக் கைதிகளைப் பாதுகாக்கும் நிதியம்” என்னும் அமைப்பினர் நேற்று கொழும்பிலுள்ள சம்புத்தத்வ ஜயந்தியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியமைக்காக ஜனாதிபதியின் செயலாளர் தண்டிக்கப்படுகிறார் என்றால் அது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும். எனவே நாடு என்ற ரீதியில் அவர்களை குறித்த நெருக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.
எனவேதான் “சில்துணி சிறைக் கைதிகளைப் பாதுகாக்கும் நிதியத்தை” ஆரம்பித்து அதன்மூலம் நிதி திரட்டி அவர்களைப் பாதுகாப்பதற்கு நாம் முன்வந்துள்ளோம். ஆகவே நாளை மறுதினம் 15 ஆம் திகதி காலை எட்டு மணிக்கு புறக்கோட்டையிலுள்ள சம்புத்தாலோக விகாரையில் நிதி திரட்டும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். ஆரம்ப நிகழ்வில் நாடு தழுவிய ரீதியிலுள்ள சகல தேரர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
மேலும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் நிதி சேகரிப்பதற்கும் ஏற்பாடுசெய்துள்ளோம். அவ் வாறு சேகரிக்கப்படும் நிதியினை எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பிலுள்ள சம்புத்தத்வ ஜயந்திக்கு கொண்டு வந்து சம்பந் தப்பட்டவர்களிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.