தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்

461 0

201608171105398556_Rs-570-crore-issue-Nellai-congress-lawyer-interview_SECVPFதிருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி விவகாரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் குறித்து நெல்லை வக்கீல் பேட்டியின் போது கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மே மாதம் 16-ந் தேதி நடந்தது. இந்நிலையில் மே 13-ந் தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூ.570 கோடி பணம் சிக்கியது.

அந்த பணம் யாருக்கு சொந்தமானது என்று நடந்த விசாரணையில் கோவை பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதற்கான ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் காட்டப்பட்டதால் வங்கியிடம் ரூ.570 கோடி ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே ரூ.570 கோடி சிக்கியது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்து தனது விசாரணையை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில் திருப்பூரில் சிக்கிய ரூ.570 கோடி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முழு விவரங்களையும் தெரிவிக்கும்படிகேட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வக்கீலுமான பிரம்மா திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு தாக்கல் செய்தார்.

இதில் அவர்கள் கூறிய தகவல்கள் குறித்து வக்கீல் பிரம்மா மாலைமலர் நிருபரிடம் பரபரப்பு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கடந்த 13.5.16 அன்று திருப்பூரில் ரூ.570 கோடி பிடிபட்டதாக பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். இதுகுறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வந்ததால் திருப்பூர் கலெக்டரிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பினேன். இந்த கேள்விகளுக்கு 30 நாட்கள் கடந்தும் அவர் பதில் கொடுக்கவில்லை.

இதனால் தமிழ்நாடு தகவல் ஆணையருக்கு மேல்முறையீட்டு மனு கொடுத்தேன். அதன் பிறகு திருப்பூர் கலெக்டர் இதுகுறித்து தேவையான தகவல்களை திருப்பூர் ஆர்.டி.ஓ.விடம் கேட்டு பெற்றுக்கொள்ளுமாறு பதில் கடிதம் அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ.விடம் ரூ.570 கோடி பிடிப்பட்டது சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை கேட்டேன். அதற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் பதில் கிடைத்தது. மேலும் சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய சி.டி. பதிவும் கொடுத்தார்கள்.

அந்த சி.டி. பதிவில் முதன் முதலில் ஒரு அதிகாரி அந்த வாகனத்தை பிடித்து சோதனை செய்வதும், அதன் பிறகு அவர் அதை திருப்பி அனுப்புவதும் பிறகு மற்றொரு இடத்தில் வேறொரு தேர்தல் அதிகாரிகள் அந்த 3 கண்டெய்னர் லாரிகளை மடக்கி பிடித்து விசாரிப்பதும் பதிவாகியுள்ளது.

மேலும் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சில பெட்டிகளை திறந்து பணக்கட்டுகளை பார்வையிட்டதும் பதிவாகி உள்ளது. அதிகாரிகள் பணம் கொண்டு வந்த லாரி டிரைவர்கள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த 4 போலீஸ் அதிகாரிகளிடம் முறையான ஆவணங்கள் கேட்டு விசாரிப்பதும் அந்த சி.டி.யில் பதிவாகி உள்ளது.

சம்பந்தப்பட்ட 3 லாரிகளில் ஒரு லாரி பதிவு எண் டெல்லியில் பதிவானது. மற்ற 2 லாரிகளின் பதிவு எண்ணும் ஆந்திர பிரதேசத்தில் பதிவானது.

3 கண்டெய்னர் லாரிகளில் 194 பெட்டிகளில் இந்த பணம் அடுக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்திருந்தனர். இந்த பணம் விசாகப்பட்டினம் ஸ்டேட் வங்கிக்கு வேண்டும் என்று விசாகப்பட்டினம் ஸ்டேட் பாங்க் மேலாளர் கோவை ஸ்டேட் பாங்க் மேலாளருக்கு 11.5.16 தேதி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு கோவை ஸ்டேட் பாங்க் மேலாளர் பணம் அனுப்புகிறோம். அதற்குரிய வாகனம் மற்றும் பாதுகாப்பு முறைகளை நீங்களே ஏற்று கொள்ள வேண்டும் என்று பதில் கடிதம் கொடுத்துள்ளார்.

அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து 3 கண்டெய்னர் லாரிகளுடன் விசாகப்பட்டினம் ஸ்டேட் பாங்க் அதிகாரி சூரிரெட்டி என்பவர் 4 பாதுகாப்பு அதிகாரிகளுடன் கோவை ஸ்டேட் பாங்குக்கு வருகை தந்து இந்த பணத்தை பெற்றுக்கொண்டு விசாகப்பட்டினத்திற்கு எடுத்து சென்றனர் என்று தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த தகவல்களில் லாரி உரிமையாளர்கள் யார்? லாரி டிரைவர்கள் யார்? லாரி எங்கிருந்து புறப்பட்டது என்ற டிரிப் சீட், லாரிகளுடைய ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் ஆவணங்கள், டிரைவர் லைசென்ஸ்கள் பற்றியும் கேள்வி கேட்டிருந்தேன். ஆனால் அந்த பதில்கள் எதுவும் தரவில்லை.

அதே நேரம் 3 கண்டெய்னர் லாரிகளில் மொத்தம் ரூ.570 கோடி மட்டும் தான் இருந்தது என்றால் அந்த பணத்திற்குரிய டினாமினேசன் விபரங்களை அதாவது ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் எத்தனை? 500 ரூபாய் நோட்டு கட்டுகள் எத்தனை? 100 ரூபாய் நோட்டு கட்டுகள் எத்தனை என்ற விபரங்களை கேட்டேன். அந்த விபரங்களும் தரப்படவில்லை. 194 பெட்டிகளில் பணம் அடுக்கப்பட்டிருந்ததாக கூறியிருந்தார்கள். ஆனால் ஒரு பெட்டியில் எவ்வளவு பணம் என்றும் கூறப்படவில்லை.

3 கண்டெய்னர் லாரிகளுடன் வந்த விசாகப்பட்டினம் வங்கி அதிகாரியின் அடையாள அட்டை முறையாக இல்லை. இதை அவர்கள் விசாரிக்கும் போது சி.டி.யில் பதிவான தகவல்கள் மூலம் தெரியவருகிறது. இது போல பணத்திற்கு பாதுகாப்பாக வந்த பாதுகாப்பு போலீசாரின் எஸ்காடு ஆர்டர் விபரங்களும் இல்லை. ரூ.570 கோடி பணத்தையும் வருவாய் துறை அதிகாரிகள் பிடித்து எண்ணியதற்கான விபரங்களும் இல்லை.

இதுகுறித்து அவர்கள் எனக்கு தந்த பதிலில் எங்கள் அலுவலகத்தில் இதற்கான பதில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்த கேள்விகளை மீண்டும் தமிழ்நாடு தகவல் ஆணையருக்கு கேட்டு மனு கொடுக்க இருக்கிறேன். அதிலும் முறையான தகவல்கள் கிடைக்க பெறாவிடில் இதுகுறித்து கோர்ட்டில் தனியாக வழக்கு தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.