மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் அடக்குமுறை தொடர்பாக கேள்விகள் எழும் என்பதால் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தை தவிர்க்க ஆங் சான் சூகி தீர்மானித்துள்ளார்.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை சூகி களம் இறக்கினார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வருகிறார்.
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 3.70 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடந்த வாரம் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மியான்மர் நாட்டின் ரக்கினே மாநிலத்தில் பாதுகாப்பு, மனிதநேயம், மனித உரிமைகள் சீரழிந்து வருவதாக குறிப்பிட்டுள்ள அன்டோனியோ, வறுமையின் பிடியில் சிக்கியுள்ள ரகினே மாநிலத்தில் வாழ்பவர்கள் நீண்டகாலமாகவே அநீதியான முறையில் நடத்தப்படுவதை அறிந்து வேதனை அடைவதாக குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவது:-
ரோஹிங்கியா போராளிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு நான் முன்னர் கண்டனம் தெரிவித்திருந்தேன். ஆனால், தற்போது மியான்மர் நாட்டு பாதுகாப்பு படையினரால் நடத்தப்படும் பாரபட்சமான தாக்குதல் அங்கு மனிதநேயத்தையும், மனித உரிமைகளையும் மீறும் வகையிலாக அமைந்துள்ளது. இத்தகைய அணுகுமுறை மதக்கலவரத்தை மேலும் அதிகப்படுத்தும்.
இதுதொடர்பாக, உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு சபையை வலியுறுத்தியுள்ளேன். அங்கு நிலவரம் மேலும் மோசமடைவதை தடுப்பதற்கான தீர்வை காண சர்வதேச சமுதாயம் முன்வர வேண்டும். அதேவேளையில், இந்த பிரச்சனைக்கான மூலக்காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ரக்கினே மாநில முஸ்லிம்களுக்கு குடியுரிமை அளிப்பது கடினமாக இருந்தால் தற்போதைக்கு அவர்களுக்கு சட்ட அங்கீகாரமாவது வழங்கப்பட வேண்டும். அந்த அங்கீகாரத்தின் மூலம் அவர்கள் வெளிப்பகுதிகளுக்கு சென்று கூலிவேலை செய்யவும், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை பெறவும் முடியும்.
ரக்கினே மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பாக ஐ.நா.சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் தலைமையிலான குழு அளித்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த இயான்மர் அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இதேபோல், ரோஹிங்கியா முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு அரசுப் படைகள் திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வருவதாகவும், இது இன அழிப்பு வேலை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஸைட் ராட் அல் ஹுசைன் குறிப்பிட்டிருந்தார்.
மியான்மரில் ஜுன்டா எனப்படும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக போராடி வீட்டுச்சிறையில் அவதிப்பட்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தனது ஆலோசனையின் பேரில் நடைபெற்றுவரும் மியான்மர் அரசை ஆங் சான் சூகி தட்டிக் கேட்காதது ஏன்? என உலகின் பல நாடுகளின் தலைவர்களும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 20-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மியான்மர் அரசின் ஆலோசகர் என்ற முறையில் இந்த கூட்டத்தில் ஆங் சான் சூகி கலந்து கொள்வார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் அடக்குமுறைகள் தொடர்பாக கேள்விகள் எழும் என்பதால் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தை தவிர்க்க ஆங் சான் சூகி தற்போது தீர்மானித்துள்ளார்.
இந்த தகவலை மியான்மர் அர்சின் செய்தி தொடர்பாளர் ஸா ஹ்ட்டே உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் மியான்மர் நாட்டின் துணை அதிபர் ஹென்றி வான் தியோ பங்கேற்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிறையில் இருந்த காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற ஆங் சான் சூகி-யை செல்லப்பிள்ளையாக சர்வதேச சமுதாயம் அன்பும் பாசமும் பாராட்டி வந்தது. சிறையில் இருந்து விடுதலையாகி, தேர்தலை சந்தித்து, வெற்றிபெற்று
ஆட்சியை கைப்பற்றிய பின்னர், மியான்மர் நாட்டு அரசின் ஆலோசகர் என்ற முறையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் ஆங் சான் சூகி சிறப்புரையாற்றியபோது உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி, வரவேற்று, பாராட்டு தெரிவித்தனர்.
இதற்கு நேர்மாறாக, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக பலமுனைகளில் இருந்து கேள்விக் கணைகளும், கண்டனக் கணைகளும் எழும் என்பதால் இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் திட்டத்தை ஆங் சான் சூகி ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.