வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக இருந்த அந்தோணி ஸ்காரமுச்சி 10 நாட்களில் பதவியை விட்டு தூக்கியடிக்கப்பட்ட நிலையில் அப்பதவிக்கு ஹோப் ஹிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து வெள்ளை மாளிகையில் பல்வேறு நிலையிலான அதிகாரிகள் மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊடகப்பிரிவு அதிகாரியாக இருந்த சீஸ் ஸ்பைசர் ராஜினாமா செய்ததையடுத்து அந்த பொறுப்புக்கு சாரா நியமிக்கப்பட்டார்.
அதேபோல், மிக முக்கிய பொறுப்பான தகவல் இயக்குநர் பதவிக்கு அந்தோனி ஸ்காராமுச்சி என்பவரை டிரம்ப் நியமித்திருந்தார். ஆனால், இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே சீஸ் ஸ்பைசர் ராஜினாமா செய்தார். மேலும், வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளர் குறித்து அந்தோனி ஸ்காராமுச்சி கடுமையான கருத்துக்களை வெளியிட்டார்.
இதனால், நியமிக்கப்பட்ட பத்தாவது நாட்களில் அந்தோனியை பதவியிலிருந்து தூக்கியெறிந்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்நிலையில், தகவல் இயக்குநர் பொறுப்புக்கு 28 வயதான ஹோப் ஹிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டிரம்ப்பின் ஊடக செயலராக இதற்கு முன்னர் பணியாற்றியவர்.
டிரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்து வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநர் பொறுப்புக்கு ஐந்தாவது நபராக ஹோப் ஹிக்ஸ் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.