சசிகலா நீக்கம் செல்லுமா?: சட்ட நிபுணர்கள் கருத்து

280 0

சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தின்படி பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து சட்டநிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியை வழிநடத்துவதற்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், மற்றும் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சசிகலா நீக்கமும், வழி காட்டுதல் குழு அமைத்ததும் செல்லுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இது சம்மந்தமாக முன்னாள் மத்திய அரசு வக்கீலும், சட்ட நிபுணருமான மோகன் பராசரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஏற்கனவே சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? செல்லாதா? என்ற விவகாரம் தேர்தல் கமி‌ஷன் முன்னிலையில் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. அது நிலுவையில் இருக்கின்ற நிலையில் இவர்களாக மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி எப்படி இன்னொரு முடிவு எடுக்க முடியும்.

தேர்தல் கமி‌ஷன் அதிகாரத்தை இவர்கள் கையில் எடுத்ததுபோல ஒரு நடவடிக்கை நடந்துள்ளது. எற்கனவே உள்ள விவகாரத்தில் தீர்வு காணப்படாமல் இருக்கின்ற நிலையில் புதிதாக அது சம்மந்தமாக வேறு ஒரு முடிவை பொதுக்குழு எடுத்திருப்பது சட்ட ரீதியாக சரியாக இருக்க வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பிரபல அரசியல் நிபுணர் காசிநாதன் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் உள்ள கட்சி சட்டவிதி 43-ன்படி பொதுக்குழுவுக்கு கட்சியில் சட்ட விதிகளை உருவாக்கவும், நீக்கவும் தான் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் என்பவர் கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று விதி உள்ளது. அவரை மாற்றுவதற்கோ, கட்சியின் அடிப்படை விவகாரங்களை மாற்றுவதற்கோ பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை.

ஆனால் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளர் ஜெயலலிதா தற்போது இறந்துவிட்டார். எனவே தற்காலிகமாகத்தான் வேறு பொதுச்செயலாளரை தேர்வு செய்திருக்கிறார்கள்.

கட்சி சட்டவிதி 20(வி)-ன் படி புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் வரை இடைக்காலமாக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கு அதிகாரம் உள்ளது. அதேபோல இடைக்கால குழுவை அமைத்து கொள்வதற்கும் அதிகாரம் இருக்கிறது.

ஆனால் இப்போது அமைக்கப்பட்டுள்ள வழி காட்டுதல் குழு சட்ட ரீதியாக செல்லுமா? என்பதில் கேள்விக்குறி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, இது ஒரு சிக்கலான வி‌ஷயம். அ.தி.மு.க.வின் கட்சி சட்டவிதிகள் என்ன சொல்கிறதோ? அதன்படி எல்லாம் நடந்துள்ளதா? என்பதை தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து முடிவு செய்யும் என்று கூறினார்.

தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் கூறும்போது, பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஏகமனதாக ஒரு முடிவு எடுத்தால் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளும் வகையில் தேர்தல் கமி‌ஷன் கருத்தில் எடுத்துக் கொள்ளும். இதில் அவர்கள் திருப்தி அடைந்தால் கட்சி சின்னத்தையும், கட்சி பெயரையும் மீண்டும் வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

Leave a comment