மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் புதியதாக தேர்வு செய்த 1013 மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது 1013 உதவி மருத்துவர்களை புதியதாக தேர்வு செய்துள்ளது.
இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே, மருத்துவத் துறையில் தமிழகம் தான் முதன்மை வகிக்கின்ற அளவிற்கு சிறப்பான மருத்துவர்களால் சேவையாற்றப்பட்டு வருகின்றது. புதிதாக ஆணை பெற்றிருக்கின்ற மருத்துவர்கள் கிராமப்புறத்திலே சேவை செய்து, கிராமப்புறத்தில் வாழ்கின்ற ஏழை, எளியோருக்கு சிறப்பான முறையிலே சிகிச்சை அளித்து மக்கள் போற்றுகின்ற அளவிற்கு உங்கள் பணி அமைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.