அரச, தனியார் துறையின் கூட்டுப் பங்களிப்புடன் நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு சினமன் ஹோட்டலில் CIMA நிறுவனத்தினால் ஏற்பாடு செய்திருந்த தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
எவ்வாறு இரு பிரதான கட்சிகள் ஒன்றுபட்டு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனவோ அவ்வாறு அரச, தனியார் துறையின் பங்களிப்புடன் நாட்டை சிறப்பாக அபிவிருத்தி செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளிட்டார்.
அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும் போது பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட போதிலும் கடந்த இரண்டு வருடகாலப் பகுதியில் பல சவால்களை வெற்றி கொண்டு நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக குறிப்பிட்டார்.
வருமானத்தை அதிகரித்து நாட்டு மக்களுக்கு வெற்றிகளை ஈட்டித் தருவது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அதில் தனியார் துறையினருக்கு பாரிய பங்களிப்பு உள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நவீன தொழில்நுட்பத்துடன் நாட்டை முன்னோக்கிச் செலுத்தவே புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டதாகவும், பாடசாலை மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் நோக்குடன் நாடுதழுவிய ரீதியில் இலவச “வைபை” வலயங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கூகுள் கிளவுட்ஸ் அமைப்பின் தலைவர் மோகீப் பான்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.