கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்று இரணைதீவு பயணமாகின்றது.
1993ம் ஆண்டு தமது பூர்வீக மண்ணைவிட்டு வெளியேறிய மக்கள் அப்பகுதிக்கு சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தின் பின்னர்மீள்குடியேறியபோது இரணைதீவில் சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அதிகளவான எரிபொருள் செலவு காணப்படுவதாகவும், பிரித்தானியர் காலத்தில் வழங்கப்பட்ட தமது உறுதிக்காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கமாறு பல்வேறு போராட்டங்களில் குறித்த பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த மேமாதம் முதல் இரணைதீவு மக்கள் தொடர் கவன ஈர்ப்பு. போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். போராட்டம் இடம்பெற்றுக்கொண்ருந்த சூழலில் அரசியல்வாதிகள் பலர் அங்கு சென்று வாக்குறுதிகள் பலவற்றை வழங்கியபோதிலும் இன்று பல நாட்கள் கடந்தும் போராட்டம் கைவிடப்படாது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இச்சூழலில் கடந்த 31ம் திகதி கடற்படை முகாமில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் மக்கள். வசித்த காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீடு செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தது, குறித்த கலந்துரையாடலில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர், கடற்படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்படி இன்று இரணைதீவில் மக்கள் குடியிருந்த பகுதியை நில அளவீடு செய்வதற்கான குழு காலை 9 மணியளவில் பயணத்தினை ஆரம்பித்துள்ளது, குறித்த அளவீட்டு பணியின் பின்னர் குறித்த பகுதியில் மக்கள் தங்கி நின்று தொழில் புரிவதற்கான அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது