ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் இன்று ஒரு நபர் கண்ணீர் புகையை ஸ்பிரே செய்து தாக்கியதில் அங்கிருந்த பயணிகள் 6 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தின் முதல் டெர்மினலில் பயணிகளை அனுமதிக்கும் செக்-இன் கவுண்டர்களில் ஏராளமான பயணிகள் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, ஒரு கவுண்டரில் யாரோ ஒரு நபர் திடீரென ஒருவித வாயுவை திடீரென ஸ்பிரே செய்துள்ளார்.
இதனால் அந்த இடத்தில் நின்றிருந்த பயணிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் உஷார்படுத்தப்பட்டனர். சுமார் 20 செக்-இன் கவுண்டர்கள் மூடப்பட்டன.
தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் அப்பகுதி முழுவதையும் சோதனையிட்டனர். ஆனால், ஆபத்து விளைவிக்கக்கூடிய எந்த பொருளும் சிக்கவில்லை. இது கண்ணீர் புகை தாக்குதலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தீயணைப்பு படை வீரர்களின் சோதனை முடிவடைந்ததையடுத்து செக்-இன் கவுண்டர்கள் திறக்கப்பட்டு, வழக்கமான பணிகள் நடைபெற்றன. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.