வடகொரியா மீது கடும் தடைகள் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், வடகொரியா அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.
சுங்ஜிபேகாம் பகுதியில் கடந்த வாரம் சக்திவாய்ந்த அணு குண்டுகளை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்ததாக செய்திகள் வெளியானது. இந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்திருந்தது.
இந்த சோதனைகள் அமெரிக்காவை மீண்டும் ஆத்திரப்படுத்தியுள்ளது. இதனால், வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவந்து நெருக்கடி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா ஒரு வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்தது.
அதில், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை வடகொரியாவுக்கு கொண்டு செல்வதற்கு தடை, வடகொரியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை, அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்-க்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவது மற்றும் அவர் பயணம் செய்வதற்கு தடை ஆகிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த வரைவு தீர்மானம் இன்று வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது. ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கம் வகிக்கும் மற்ற நாடுகளான சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவையும் தற்காலிக உறுப்பு நாடுகளும் ஆதரித்து வாக்களிக்கும் பட்சத்தில் இந்த தீர்மானம் நிறைவேறும்.
வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பு அந்தஸ்து கொண்டுள்ள ஏதாவது ஒரு நாடு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் தீர்மானம் செயலற்றதாகிவிடும்.
வடகொரியாவின் பெரும்பாண்மையான எண்ணெய் தேவையை ரஷ்யா மற்றும் சீனா பூர்த்தி செய்து வரும் நிலையில் இந்த இரண்டு நாடுகளும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்குமா? அல்லது வாக்களிக்காமல் புறக்கணிக்குமா? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தீர்மானம் நிறைவேறினால் அதற்காக அமெரிக்கா பெரும் விலையை அளிக்க நேரிடும் என வடகொரியா பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும், எந்த நடவடிக்கைக்கும் உடனடி பதில் விளைவு கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.