தமிழ்நாடு சாரண- சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவியை எச்.ராஜாவிற்குத் தாரை வார்க்க எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையனும் முயற்சி செய்கிறார்கள் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சாரண- சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவியை தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவிற்குத் தாரை வார்க்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் கூட்டுச் சதி செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி சாரண – சாரணியர் இடையேயும், நடுநிலையாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இயக்கத்தின் புரவலராக ஆளுநரும், துணைப் புரவலராக கல்வி அமைச்சரும் இருக்க, தலைவர் பதவியை பா.ஜ.க.விற்கு கொடுத்து, பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் காவி நஞ்சை விதைக்க இப்போது திரைமறைவில் அனைத்து முயற்சிகளும் நடை பெறுவதாகக் கல்வியாளர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட நாட்களாகத் தேர்தல் நடைபெறாமல் இருந்த சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ள இந்தப் பதவிக்கு வருகின்ற 16.9.2017 அன்று தேர்தல் நடைபெறகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் வாக்களித்து தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தப் பதவிக்கு எச்.ராஜா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காகவே சில தினங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், எச்.ராஜாவிற்கு எதிராக முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநராக பணியாற்றி, பள்ளிக் கல்வியில் பழுத்த அனுபவம் பெற்றுள்ள மணி போட்டியிட விரும்புகிறார் என்று தெரிந்ததும் அவர் ஆளுங்கட்சியின் சார்பில் மிரட்டப்பட்டுள்ளார். “நீங்கள் தலைவர் பதவிக்குப் போட்டியிடக் கூடாது”, என்று கல்வித்துறை அமைச்சர் தரப்பிலிருந்தே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆனாலும், போட்டியிட்டே தீருவேன் என்று அவர் தீர்மானமாக, துணிச்சலோடு களத்தில் நிற்பதால், இப்போது வேறு வழியில்லாமல், முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளை எச்.ராஜாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் சார்பில் மிரட்டப்படுகிறார்கள். அவருக்கு வாக்களிக்கவில்லை யென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத்திற்கு எதிரான முறையில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
எச்.ராஜாவைப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்க நினைத்து, செயல்பட்ட கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இப்போது போட்டி என்ற வந்தவுடன் கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் மூலம் வாக்காளர்கள் மிரட்டப்பட்டு, அதிமுக நடத்தும் ஜன நாயகத்திற்குப் புறம்பான இடைத்தேர்தல்களைப் போலவே இந்தத் தேர்தலையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன.
பா.ஜ.க.வைச் சேர்ந்த வரை பதவியில் அமர்த்த அந்தத் தேர்தல் தொடர்பான விதிகள் எல்லாம் சர்வாதிகாரரீதியில் வளைக்கப் பட்டுள்ளன என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
புதிய கல்விக் கொள்கை மூலம் அகில இந்திய அளவில் காவிக் கொள்கையையும், மதவாத கொள்கைகளையும் மாணவர்கள் இதயத்தில் புகுத்திவிட முயற்சிக்கும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு, தற்போது தமிழகத்தில் உள்ள சாரண, சாரணியர் இயக்கத்திற்குள்ளும் புகுந்து தமிழக மாணவர்கள் மனதில் காவிக் கொள்கையைப் புகுத்திக் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறது.
ஊழல் அ.தி.மு.க. அரசுடன் கைகோர்த்து, அணிகளை இணைத்து வைக்க முயற்சித்து, பெரும்பான்மை இழந்த பிறகும் ஒரு மைனாரிட்டி ‘குதிரை பேர’ அரசு ஆட்சியில் நீடிப்பதற்கு ஆளுநர் மூலமும், மத்திய உள்துறை அமைச்சர் மூலமும் அனைத்து சட்ட விரோத உதவிகளையும் செய்து, தமிழக மக்களுக்கு விரோதமாக மட்டுமல்ல, பா.ஜ.க.வினருக்குப் பதவிகளைப் பெறவும் முழு வீச்சில் செயல்படுகிறது.
தன் கட்சியினருக்கு முக்கிய பதவிகளை பெறவே இப்படி அ.தி.மு.க.வின் அலங்கோல ஆட்சியை ‘உள்கட்சி விவகாரம்’ என்று பா.ஜ.க. கூறி வருகிறது என்பது, இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை மூலமும், சி.பி.ஐ. மூலமும் ரெய்டுகள் நடத்தியது பா.ஜ.க.வினருக்கு பதவி பெறுவதற்காகவே என்ற ரகசிய திட்டமும் இப்போது அம்பலத்திற்கு வந்து விட்டது. ஊழல் அ.தி.மு.க. அரசாங்கத்தில் பதவி பெற, இப்போது பா.ஜ.க. பகிரங்கமாக முயற்சி செய்து கொண்டிருப்பது இந்த சாரண, சாரணியர் இயக்கத் தேர்தலில் ஊரறிந்த செய்தியாகி விட்டது.
ஆகவே, அ.தி.மு.க.- பா.ஜ.க. பொருந்தாக் கூட்டணி மாநிலத்தின் கல்வி அமைப்பிலும், குறிப்பாக மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் சாரண, சாரணியர் இயக்கத்திலும் நுழைய அனுமதித்து விட வேண்டாம் என்று வாக்காளர்களாக உள்ள கல்வியாளர்களையும், முதன்மைக் கல்வி அதிகாரிகள், மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோரையும் கேட்டுக் கொள்கிறேன்.
பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜாவை பதவியில் அமர்த்த, தேர்தல் விதிகளை உள்நோக்கத்துடன் மாற்றியமைத்துள்ள ஊழல் அ.தி.மு.க. அரசுக்கும், அந்தப் பதவியைப் பெற அரசு இயந்திரத்தை வைத்து வாக்காளர்களை மிரட்டும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கும், மாநில பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜா ஆதரவாளர்களுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படித் திரைமறைவில் ஒரு அரசை மிரட்டி, அதிகாரிகளை அச்சுறுத்திப் பதவி பெறுவதற்குப் பதில், நாங்களும் ஊழல் அதிமுக அரசின் கொள்ளைகளில் பங்குதாரர்கள் என்பதை வெளிப்படையாக மாநில பா.ஜ.க.வினர் மக்கள் மன்றத்தில் ஒப்புகொண்டு விடலாம்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.