கனடாவிலிருந்து ஒலிபரப்பாகும் பிரபல தமிழ்த்தொலைக்காட்சி விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசியல் விமர்சகர் நேரு குணரட்னம் அவர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் பாதுகாப்புக்காக அரசாங்கம் ஒதுக்கிய நிதி 31,120கோடி. இந்த நிதியானது ராஜபக்ஷ காலத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கிய நிதியைவிட 25 வீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?
மேலும் வடக்குக் கிழக்கு புனரமைப்புக்காக 350கோடி ஒதுக்கிய அரசாங்கம் மகாவலி அபிவிருத்திக்கு 6000கோடிரூபா ஒதுக்கியுள்ளதோடு வஜம்ப அபிவிருத்தி திட்ட வேலைக்காக மேலும் 2000கோடி ரூபா நிதியும் இவ்வாண்டு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.சிங்களத் தலைவர்கள் தமது மக்களுக்காக பெருந்தொகையான நிதியை ஒதுக்கி அபிவிருத்தியை மேற்கொள்ளும்போது ஏன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் பெருமளவான நிதியை தமிழ்ப் பிரதேசங்களுக்கு பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் வடக்கில் இராணுவப் பிரச்சன்னம் அதிகரித்துக்கொண்டே செல்வது தொடர்பாகவும் சுட்டிக்காட்டிய அவர் மேலும் தமிழ்த் தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.