மாகாண சபை தேர்தல் குறித்தான 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்த பின்னர் மீண்டும் அதனை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதன்படி விரைவில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் வினவியபோதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அனைத்து மாகாண சபை தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தும் நோக்கில் கடந்த மாத இறுதியில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த சட்டமூலத்தில் மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கான தேர்தல் திகதியை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமையை அடுத்து பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வெளிவந்த வண்ணமாக உள்ளன. மாகாண சபைகளின் தேர்தலுக்கான திகதியை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்ற ஷரத்திற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்தும் மாகாண சபைகளிடம் இருந்து பல கோணங்களில் இருந்து எதிர்ப்புகள் வெளிவந்துள்ளன.
இதன்படி வடக்கு, ஊவா, தென் உள்ளிட்ட மாகாண சபைகளி்ல் குறித்த சட்டமூலம் நிராகரிக்கப்பட்டது. அதேபோன்று மேல் மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் குறித்த சட்டமூலத்தின் மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் திகதியை பாராளுமன்றம் தீர்மானிப்பதானது மாகாண சபையின் அதிகாரங்களை பறித்தெடுக்கும் உத்தி என்று மாகாண முதலமைச்சர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இந்நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் வினவிய போது,
மாகாண சபை தேர்தல் முறைமை குறித்தான 20 ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். எனினும் எப்போது சமர்ப்பிக்கப்படும் என்ற திகதி தெரியாது என்றார்.