கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இன்று 203 வது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா்.
இவா்களின் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலின் ஒதுக்குபுறமாக இடம்பெற்று வருகிறது.
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும், கண்முன்னே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும், இராணுவத்திடம் சரணடைந்தும் என பல வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தங்களின் காணாமல் செய்யப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த வாரம் இடம்பெற்று முடிந்தது.
திருவிழா ஆரம்பிக்கும் போது ஆலய நிர்வாகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களிடம் திருவிழா இடம்பெறும் பத்து நாட்களும் தங்களின் பந்தலை அகற்றி திருவிழாவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அதன் பின்னா் மீண்டும் வழமை போல் பந்தல் அமைத்து கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளுங்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஆலயத்திற்கு அருகிலுள்ள சிறிய கடை ஒன்றில் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த ஆறாம் திகதி திருவிழா நிறைவுற்ற நிலையில் இன்று(10) மாலை ஆலய நிர்வாகம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனா்.
அதில் தங்களின் 2017-09-10 திகதி நிர்வாக கூட்டத்தின் தீர்மானத்தின் படி ஆலயத்தில் தொடர்ந்தும் விழாக்கள் இடம்பெற இருப்பதால் ஆலய வீதியை தங்களுக்கு வழங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறித்த கடித்தின் பிரதிகள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா்,பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன், கரைச்சி பிரதேச செயலாளா், கிராம சேவையாளர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனா்.
ஆலய நிர்வாகத்தின் இந்த செயற்பாடு சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.