தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புலி முத்திரை

380 0

police-logo-720x480காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களினூடாக, கஞ்சா கடத்தல் சம்பவங்களை முறியடிக்கும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புலி முத்திரை குத்தப்படுவதாக உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதன்மூலம், பெரும்பான்மையின பொலிஸ் உத்தியோகத்தர்களை விட திறமையாக செயற்படும் தமிழ் உத்தியோகத்தர்களின் திறமைகளை, மழுங்கடிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த மாதகாலமாக பருத்தித்துறை, இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பொதிகளை விசேடமாக, தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைப்பற்றியிருந்தனர்.

குறிப்பாக வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்னவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இக்குற்றச்செயல்கள் இனங்காணப்பட்டு முறியடிப்பு செய்யப்பட்டுள்ளன. காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவர்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளமை பொலிஸ் உயர்பீடங்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் பருத்தித்துறை பகுதி மற்றும் அச்சுவேலி, தொண்டைமானாறு பகுதிகளுக்கு வரும் பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வு அதிகாரிகள்இ கஞ்சா கடத்தல்களை அண்மையில் முறியடித்திருந்தனர். தமது பொலிஸ் பகுதிகளில் கஞ்சா கடத்துவது தெரிந்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் திறமையாக செயற்படும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புலி முத்திரை குத்துகின்றனர்.

மேலும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றங்களும் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் ஒரு காரணமாகவே சில தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இளவாலையில் இருந்து நெல்லியடி, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையங்களுக்கும் வல்வெட்டித்துறையில் இருந்து இளவாலைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில் பருத்தித்துறை பகுதியில் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொதிகளை கடற்படையினர் பொலிஸ் நிலையங்களில் பாரப்படுத்த விரும்பாமல் மதுவரி நிலையங்களில் பாரப்படுத்துகின்றனர். பல கனவுகளுடன் பொதுமக்களுக்கு சேவையாற்றவும் சாதனைகளை படைக்க வரும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் திறமைகள் சில அதிகாரிகளினால் மழுங்கடிக்கபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.