கூட்டமைப்பின் தலைவரைத் தாக்கும் அளவிற்கு நானில்லை! அன்ரனி ஜெகநாதன்

389 0

antony2-600x399தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நான் தாக்கவில்லை என்று வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார்.வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனத்தை சாந்தி சிறிஸ்கந்தராசாவுக்கு வழங்கியமை தொடர்பாக நான் கடுமையான வாதத்தை முன் வைத்தேன்.

இதனால் கடுமையான கருத்து மோதல் இடம்பெற்றது. ஒரு கட்டத்தில் நான் கோபமாக ஒலிவாங்கியை மேசை மீது வைக்கும் போது அது தவறுதலாக கீழே விழுந்து விட்டது.

இச்சம்பவத்தை திரிவுபடுத்தி நான் இரா. சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசித் தாக்கினேன். அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அது முற்றிலும் பொய்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் முன்பாக யாருமே கை நீட்டிப் பேசமாட்டார்கள். அதற்குள் நானும் அடங்கியுள்ளேன். ஆகவே எனது கட்சிக்குள் நான் கருத்து மோதலில் ஈடுபடுவேன்.

ஆனால் கூட்டமைப்பின் தலைவர் மீது ஒலிவாங்கியை வீசி தாக்குகின்ற அளவுக்கு நானில்லை என்று தெரிவித்துள்ளார்.