எந்த தேர்வையும் சமாளிக்கும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

412 0

எந்த போட்டி தேர்வையும் சமாளிக்கும் வகையில் மாணவர்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தர்மபுரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அடுத்த மாதம் 7-ந் தேதி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கான கால்கோல் விழா இன்று காலை தர்மபுரி அரசு கலை கல்லூரியில் நடந்தது.

இந்த விழா அதிகாலையில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, கே.சி.வீரமணி, பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அனைவரும் பந்தல் கால் நட்டனர்.

விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வு கொள்கையில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்த நிலைப்பாட்டில் தான் நாங்கள் இருக்கிறோம்.இருப்பினும் அகில இந்திய அளவில் நடை பெறும் எந்த ஒரு போட்டி தேர்வையும் எளிதில் சந்திக்கக்கூடிய அளவிற்கு தமிழக மாணவர்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இதற்காக மாவட்ட தோறும் மையங்கள், பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் வகுப்புகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கம்ப்யூட்டர், இண்டர்நெட் வசதி உள்ள மாணவர்களுக்கு இணையதள மூலமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. டெல்லி மற்றும் கேரளா மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் போட்டி தேர்வுக்கான 54 ஆயிரம் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் 10 சதவீத மாணவர்கள் கற்றல் குறைபாடு உள்ளவர்களாக உள்ளனர். அவர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபரிடம் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 7-ந் தேதி டாக்டர் எம.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடை பெறுகிறது. இதற்கான கால்கோல் நடும் விழா 6 அமைச்சர்களின் முன்னிலையில் இன்று நடை பெற்றது.

இதைத்தொடர்ந்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.மேலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாவட்ட கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment