அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்

242 0

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை வீழ்த்தி சகநாட்டவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டங்கள் அரங்கேறின.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மற்றும் அதே நாட்டைச் சேர்ந்த மேடிசன் கீஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர் களமிறங்கியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ்-ஐ வீழ்த்திய ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மீது அனைவரின் பார்வையும் இருந்தது. அதற்கேற்ப வெறும் 61 நிமிடங்களில் சாம்பியன் பட்டத்தை ஸ்லோன் தட்டிப்பறித்து விட்டார். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய ஸ்லோன், இரண்டாவது செட்டில் கீஸ்-க்கு சிறிதும் வாய்ப்பு அளிக்காமல் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 24 வயதான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இடதுகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக 11 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு ஸ்லோன் கடந்த ஜூலை மாதம் தான் மீண்டும் களம் திரும்பினார். அதன் பிறகு எழுச்சி கண்டு வரும் அவர் அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறார்.

Leave a comment