நீட் விவகாரத்தில் கட்சி அரசியலை கடந்து பொதுமக்கள் போராட வேண்டும்: தமிழருவி மணியன்

732 0

நீட் விவகாரத்தில் கட்சி அரசியலை கடந்து சென்னையில் லட்சக்கணக்கில் திரண்டு பொதுமக்கள் போராட வேண்டும் என்று தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களைப் பாதிக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சினைகளில் கூட ஒரே களத்தில் ஒன்றுபட்டு நின்று ஓங்கிக் குரல் கொடுத்ததே இல்லை. எந்த பிரச்சினையிலும் அதிகார பீடத்தைக் குறிவைக்கும் ஆதாய அரசியல் அணுகு முறைதான் இங்கே அன்றாடம் அரங்கேறி வருகிறது. ‘நீட்’ பிரச்சினையில் மத்திய மாநில அரசுகள் நம் ஏழை எளிய கிராமப்புற மாணவச் சமுதாயத்திற்கு இழைத் திருக்கும் அநீதி எந்த வகையிலும் மன்னிக்கக் கூடியதன்று. கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.

மண் சார்ந்த கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மொழி என்ற இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சற்றும் ஒத்துவராத சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்த முயலும் மோடி அரசின் மறை முகச் செயல் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்றால் தனித்தனியாக மேடை போட்டு முழங்குவதை நிறுத்தி விட்டு ஆளும் அ.தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சித் தொண்டர்களும் பொது மக்களும் ஒன்று கூடி அற வழியில் போராட முற்பட வேண்டும். மக்கள் தங்கள் நலனைப் பாதுகாக்க பெருந்திரளாகக் கூடிக் குரல் கொடுப்பது ஜனநாயக அரசியல் தந்திருக்கும் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையைப் பாதுகாப்பது நீதிமன்றத்தின் கடமையாகும். இதில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்கு இடம் இருக்க வாய்ப்பில்லை.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதால் தான் இன்று மோடி அரசு கல்வித் துறையில் முடிந்த வரை மூக்கை நீட்ட முடிகிறது.

தி.மு.க. 14 ஆண்டுகள் மத்திய அரசில் இடம் பெற்றிருந்த போதிலும், முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கலைஞரின் தயவால் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த போதும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற எந்த வலிமையான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா 15 ஆண்டுகளுக்கு மேல் தமிழக முதல்வராக இருந்த போதும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற எந்தத் தீவிர நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.

இரண்டு திராவிடக் கட்சிகளும் இந்தப் பிரச்சினையில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவை தான் என்பது கசப்பான உண்மை. இப்போதாவது ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதைத் தவிர்த்து, கட்சி அரசியலைக் கடந்து அனைத்துக் கட்சித் தொண்டர்களும் சமூக நலனில் நாட்டமுற்ற பொது மக்களும் ஒரே மேடையில் பல லட்சம் பேர் தமிழகத்தின் தலைநகரில் ஒன்று திரண்டு குரல் கொடுத்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வழி காண்பது தான் நம் மாணவச் சமுதாயத்திற்கு நாம் வழங்கும் நிரந்தர நன்மையாகவும் அனிதாவின் மரணத்திற்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகவும் இருக்கும்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பகையை சார்ந்த அரசியலை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண் பதிலாவது நம் தலைவர்கள் தவிர்க்க முயல்வார்களா என்பதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment