நீட் பிரச்சினையை திசை திருப்புகின்றனர் என்றும் ஏமாற்று அரசியலுக்கு சாவு மணியடிக்கும் தர்மயுத்தம் தொடங்கியுள்ளது என்றும் பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடந்த கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது:-
தமிழகத்தில் 1967-ல் இருந்தே நல்லாட்சி என்றால் என்னவென்று தெரியாத நிலைக்கு ஆளாக்கி விட்டனர். ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் பா.ஜனதாவை குறை கூறுகிறார்கள். அதனால் அவதூறுகளை முறியடித்து திராவிட கூட்டத்திற்குள் தாமரை மலரும்.
சொந்த கட்சியிலேயே தலைவராக முடியாத ஸ்டாலினால் ஒரு போதும் தமிழக முதல்வராக முடியாது. தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள். பணத்தின் மீது அரசியல் நடத்தியவர்கள், தற்போது பிணத்தின் மீது அரசியல் செய்ய தொடங்கியுள்ளனர். பா.ஜனதா ஒரு போதும் அதை அனுமதிக்காது.
அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்யும் தி.மு.க. இலங்கையில் லட்சக்கணக்கான பெண்கள் கொலை செய்யப்பட்ட போது எங்கே சென்றது? தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த பா.ஜனதா தயாராகிவிட்டது. பா.ஜனதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஆட்சி மொழியாகும்.
நீட் பிரச்சினையை திசை திருப்புகின்றனர். ஏமாற்று அரசியலுக்கு சாவு மணியடிக்கும் தர்மயுத்தம் இங்கிருந்து தொடங்கியுள்ளது. வருகிற 13-ந்தேதி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக வருகிற 14-ந்தேதி பா.ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
எங்கள் எதிர்ப்பை இனிமேல் உங்களால் சமாளிக்க முடியாது. தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தே தீரும் என்றார்.
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசுகையில், மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்து சந்தர்ப்பவாதிகளும், தமிழக பிரிவினைவாதிகளும் ஜிகாத் பிரிவினைவாதிகளும் கூட்டணி சேர்ந்து பல திட்டங்களை தீட்டி, தமிழகத்தில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு மாணவி அனிதாவை பயன்படுத்த நினைத்தனர்.
எனவே அனிதாவின் மரணம் தூண்டப்பட்டதாக இருக்க வேண்டும். நீட் தேர்வால் இந்தாண்டு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவிலான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். உண்மையாக படிக்கும் குழந்தைகளுக்கு நீட் தேர்வால் லாபம் கிடைத்துள்ளது. தி.மு.க. உள்ளிட்ட தீய சக்திகளை தமிழக அரசியல் களத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழக தலைவர் தேவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.