இறையாண்மை திவாலாகிவிட்ட இலங்கைக்கு ஜெயமோகன் வக்காலத்து வாங்கலாமா? – புகழேந்தி தங்கராஜ்

987 0

pugalenthi_tangarajஇலங்கை ராணுவத்தின் புனர்வாழ்வு மையங்களிலிருந்து கடும் சித்ரவதைகளுக்குப் பின் நடைப்பிணமாக வெளியே வருகிற தமிழீழ விடுதலைப் போராளிகளின் மர்ம மரணங்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் ‘இந்த மரணங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த சர்வதேச மருத்துவ நிபுணர்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறது முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாண சபை.

தமிழினத்தை அடியோடு நசுக்குவதற்காக சிங்கள இலங்கை என்கிற ஈவிரக்கமற்ற ஒரு வக்கிர தேசம் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும். அதைக் கவனத்தில் கொண்டுதான் பேசுகிறார் விக்னேஸ்வரன். மெல்ல மெல்லக் கொல்லும் விஷம் ஏதாவது போராளிகள் உடலில் செலுத்தப்பட்டிருக்கக் கூடுமோ என்கிற அச்சம் அதிகரித்துவரும் நிலையில் நியாயம் கேட்கிறார். திடீர்ப் புற்றுநோய்ப் பாதிப்புக்கு என்ன காரணம் – என்கிற தமிழ்ச் சமூகத்தின் குரலை எதிரொலிக்கிறார். ஐயங்களை அகற்றுவது ஒரு அரசின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

உயிரிழந்த போராளிகளின் உடல்களை மீட்டெடுத்துப் பரிசோதனைக்கு உட்படுத்துவது முக்கியம்தான்! அதே அளவுக்கு புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியே வந்திருக்கும் போராளிகளை உடல் பரிசோதனைக்கு உட்படுத்துவதும் முக்கியம். அவர்கள் உடலில் நச்சு ஏதாவது செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிவது எளிது. அதைச் சோதித்தறிந்தால் இலங்கையின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும். இதைத்தான் வலியுறுத்துகிறார் விக்னேஸ்வரன்.

(அந்த அளவுக்கு இலங்கை அம்பலமாகிவிட்டாலும்கூட ‘அந்தத் தண்டவாளத்திலும் நாங்கள் தான் ரயில் விடுகிறோம் தெரியுமா’ – என்று வாய்கிழியப் பேசுவதைத் தவிர வேறெதையும் கிழிக்கப் போவதில்லை எங்கள் பாரத தேசம்!)

‘புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட 12000 போராளிகளில் இதுவரை 107 பேர் மர்மமாக இறந்திருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் புற்றுநோயாலேயே உயிரிழந்திருக்கின்றனர்’ என்று இலங்கை நாடாளுமன்றத்திலேயே ஸ்ரீதரன் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். “புகை மற்றும் மதுப் பழக்கம் இல்லாத ஓர் ஒழுக்கமான இயக்கப் போராளிகள் புனர்வாழ்வின் பின் புற்றுநோயாளிகளானது எப்படி” என்பது ஆனந்தனின் கேள்வி.

‘அங்கே நடந்தது இனப்படுகொலையல்ல’ என்று இங்கேயிருந்து ஏப்பம் விடுகிற ஜெயமோகன்கள் இதையெல்லாம் தேடிப்பிடித்தாவது படிக்க வேண்டும். விஷ்ணுபுரத்திலிருந்து கொண்டு விபரீதமாகப் பேசக் கூடாது.

சென்ற ஆண்டு பிற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சகோதரி தமிழினி புற்றுநோய்க்கு இரையானதாக செய்தி வந்தபோது நான் அதிர்ந்து போனேன். ‘பரந்தனில் பூத்த கருப்பு மலர்’ என்கிற ‘தமிழக அரசியல்’ கட்டுரை அந்த அதிர்ச்சியின் எதிரொலிதான்!

“3 ஆண்டு சிறை மற்றும் 2 ஆண்டு புனர்வாழ்வுமுகாமில் தமிழினி சந்தித்த சித்ரவதைக் கொடுமைகளுக்கும் அதனால் அவருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாததற்கும் (அல்லது – திட்டமிட்டே தவறான சிகிச்சை வழங்கப்பட்டதற்கும்) அவரது உயிரைக் குடித்திருக்கும் புற்று நோய்க்கும் தொடர்பிருக்கிறதா” என்கிற கேள்வியை ‘தமிழக அரசியல்’ வாயிலாக எழுப்பியிருந்தேன்.

“கொழும்பிலேயே தமிழினிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்க வேண்டும்….. அதை ரகசியமாக வைத்திருந்தது ஏன்? கொழும்பில் எந்த மருத்துவமனையில் தமிழினிக்கு மருத்துவப் பரிசோதனை நடந்தது? புற்றுநோய்க்கான காரணம் குறித்து அந்தச் சோதனை மூலம் தெரிய வந்ததென்ன? புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்த பிறகும் மருத்துவமனையில் அனுமதிக்காமல் சிறையிலும் புனர்வாழ்வு முகாமிலுமே அவரை வைத்திருந்தது ஏன்” – என்பதெல்லாம் அந்தக் கட்டுரை மேலதிகமாக எழுப்பிய கேள்விகள்.

இறையாண்மையுள்ள ஒரு நாட்டின்மீது இறையாண்மை உள்ள இன்னொரு நாட்டின் குடிமகனான நான் பகிரங்கமாக முன்வைத்த கேள்விகள் அவை. இன்று ஈழத் தாயக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடமாகாண சபையின் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அந்த மண்ணிலிருந்தே இந்தக் கேள்விகளை எழுப்புகிறார். தன் நாட்டு முதலமைச்சர் ஒருவரின் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டிய நிலை இலங்கைக்கு!

“இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் மிகுந்த கவனத்துடன் இலங்கை அரசு முன்னேறிச் செல்கின்ற நிலையில்இ முதல்வர் விக்னேஸ்வரனின் செயல்பாடுகளும் கருத்துக்களும் மிகக் கடுமையானவையாக உள்ளன. இதுஇ அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று இலங்கையின் மூத்த அமைச்சரான ராஜித சேனாரத்ன சொல்லி வாய்மூடுவதற்குள்இ மர்ம மரணங்கள் குறித்த மிகமிகக் கடுமையான தீர்மானத்தை வடமாகாண சபையில் முன்மொழிகிறார் விக்னேஸ்வரன். என்ன செய்யப் போகிறது இலங்கை?

இரண்டே இரண்டு வழிதான் இருக்கிறது இலங்கைக்கு! ஒன்று விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஏற்று போராளிகளின் மர்ம மரணங்கள் குறித்து ஆய்வு நடத்த சர்வதேச மருத்துவ நிபுணர் குழுவை அனுமதிப்பது! அல்லது இறையாண்மையுள்ள இலங்கை மீதும் கருணையே உருவான இலங்கை ராணுவத்தின் மீதும் விக்னேஸ்வரன் தொடர்ந்து அவதூறு பரப்புவதாகக் குற்றஞ்சுமத்தி அவர்மீது சட்ட நடவடிக்கை எடுப்பது!

இந்த இரண்டில் ஒன்றைச் செய்கிற துணிச்சல் இல்லாவிட்டால் ‘இலங்கையின் இறையாண்மை திவாலாகிவிட்டது’ என்றாவது அறிவித்துத் தொலைக்க வேண்டும். வெட்கம் மானம் ரோஷம் சூடு சுரணையில்லாமல் ‘விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் பாரதூரமானவை’ என்று வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருக்கக் கூடாது.

‘நடந்தது இனப்படுகொலைதான்’ – என்றும் ‘சர்வதேச விசாரணை அவசியம்’ – என்றும் ‘வடக்கு மாகாணத்தில் பள்ளிப் பிள்ளைகளிடையே போதை மருந்து பழக்கத்தைப் பரப்ப ராணுவம் முயல்கிறது’ என்றும்’போராளிகளின் மர்ம மரணம் தொடர்பில் ஆய்வு செய்ய சர்வதேச மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்படவேண்டும்’ என்றும் குற்றஞ்சாட்டும் விக்னேஸ்வரன் ஒரு சாதாரண மனிதரல்ல! ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண முதல்வர். ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் பயன்படுத்துபவர்.

தன் நாட்டு மத்திய அரசாங்கத்தின் மீது (இப்போதைக்கு இலங்கைக்குள்தான் இருக்கிறது வட மாகாணம்!) கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் விக்னேஸ்வரன். அதன் கருவையே குற்றஞ்சாட்டுகிறார். அப்படியும் அவர்மீது மருந்துக்குக்கூட நடவடிக்கை எடுக்க முடியவில்லை இலங்கையால்! பௌத்த சிங்கள இலங்கையின் கருவிலேயே பிழையிருக்கிறது – என்பதல்லாமல் இந்தக் கையாலாகாத்தனத்துக்கு வேறென்ன அர்த்தம்? கருவிலேயே பிழையிருக்கிற ஒரு இழிபிறவிக்கு இறையாண்மை கிறையாண்மை என்கிற வீறாப்பெல்லாம் எதற்கு!

அண்மையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றும்போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் விசாரித்தால்தான் நியாயம் கிடைக்கும் என்று மீண்டும் வலியுறுத்தியிருந்தார் விக்னேஸ்வரன்.

‘உள்நாட்டு நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதி வழங்குமென்று எதிர்பார்க்கவே முடியாது. உள்ளக விசாரணைகள் குமாரபுரம் வழக்கு போல்தான் முடியும். அதில் சந்தேகமேயில்லை……..

வழக்கு நடத்துபவராகக்கூட இலங்கை அரசின் சட்டத்துறை தலைமை அதிபதி இருக்கக் கூடாது. ராணுவத்துக்குச் சாதகமாக பக்கச் சார்பாகவே இவர்கள் நடந்துகொள்வதாய் சர்வதேசப் புகழ்பெற்ற சட்ட நிபுணர்கள் குழு ஒன்று குற்றஞ்சாட்டியதை நாம் மறந்துவிடக் கூடாது’ என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார் விக்னேஸ்வரன்.

‘இலங்கையில் தமிழினப்படுகொலை தொடங்கியது 2008ல் அல்ல… அதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே அது தொடங்கிவிட்டது… இந்த – தொடர் இன அழிப்புக்காக இன்றுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை’ என்பது விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டு மட்டுமல்ல – வரலாற்றை அறிந்தவர்களின் ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டு.

இலங்கையின் இந்த நீண்ட நெடிய பாரபட்ச வரலாற்றை அறியாமல் ‘சிங்கள ஜே.வி.பி.யைக் கொன்று குவித்தது போலத்தான் தமிழ்ப் புலிகளையும் கொன்று குவித்திருக்கிறார்கள்…. இலங்கையின் இந்தப் பாரபட்சமற்ற நடுநிலையான அணுகுமுறையை உளமார மனமார பாராட்டுகிறேன்’ என்று ஒரு பொறுக்கி ராணுவத்தின் முதுகில் சொரிவதற்காக ஒரு நல்ல எழுத்தாளன் தன்னுடைய பேனா முனையைப் பயன்படுத்தலாமா?

இறையாண்மை திவாலாகிவிட்ட இலங்கைக்கு வக்காலத்து வாங்குவதை விட்டுவிட்டு வேறு ஏதேனும் உருப்படியான வேலை இருந்தால் அதைப் பாருங்கள் ஜெயமோகன்! ‘பாபா -Second Part’ என்ன ஆயிற்று? முத்தமிழும் முழக்கமிடும் கபாலியின் மகத்தான வெற்றியிலிருந்தே அதை ஆரம்பித்துவிடலாமே! அதற்கு SCRIPT எழுதத் தொடங்கலாமே! ரஜினிக்கு நல்லதோ இல்லையோ நாட்டுக்கு அது நல்லதாயிற்றே!

தாய்மண்ணுக்காகப் போராடிய பேராண்மை கொண்ட எங்கள் விடுதலை வீரர்களை மெல்ல மெல்லக் கொல்லும் இலங்கையின் நயவஞ்சகத்தை அம்பலப்படுத்தத் தமிழினம் போராடுகிற ஒரு இக்கட்டான நேரத்தில் கேணத்தனமாக எதையாவது உளறித் தொலைத்து எங்களைவிட தமிழை அழகாக எழுதும் உங்கள் முகத்தில் நீங்களே கரிபூசிக் கொள்ளாதீர்கள் ஜெயமோகன்!

இதைப்பற்றிப் பேசுவதற்கு எனக்குத் தகுதி இருக்கிறது என்கிற உரிமையுடன்தான் பேசுகிறேன் ஜெயமோகன்! விரிவாகப் பேச வேண்டுமெனில்இஅதையும் பேசலாம்தான்! பாபா செகண்ட் பார்ட்டுக்கு ஸ்கிரிப்ட் எழுதுவதா இதைப் பற்றிப் பேசுவதா என்பதுகுறித்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்! Second Part’