நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிப்பேற்படும் பகுதியிலிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஒரு வாரகாலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றத்தால் தொடர்ந்தும் பலத்த மழை பதிவாகி வருகின்றது. அதனடிப்படையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீற்றருக்கும் மேல் மழைவீழ்ச்சி நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளது. இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயமுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், குறிப்பாக கினிகத்தேனை பிரதேசம், களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை, புளத்சிங்கள, பாலிந்தநுவர, இங்கிரிய, மத்துகம ஆகிய பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, புளத்கொஹாப்பிட்டிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் கிரிவுல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், கலவானை மற்றும் நிவித்திகலை, காலி மாவட்டத்தின் நாகொடை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே இவ்வாறு மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆய்வுகள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் மண்சரிவு ஏற்படும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடன் கூடியகாலநிலை தொடர்ந்தால் நிலச்சரிவு, பாறைகள் இடிந்து விழுதல், நிலத்தாழ்வு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே அங்கு மலைப்பாங்கான பிரதேசங்களில் வாழும் மக்கள் அதிக மழை பெய்யும் சந்தர்ப்பங்களின்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மரங்கள் அல்லது கம்பங்கள் முறிந்துவிழும் அபாயம்,நிலம்,சுவர், அல்லது கட்டடங்களில் ஏதேனும் வெடிப்புக்கள் ஏற்படுதல், நிலத்திலிருந்து திடீரென நீருற்றுக்கள் உள்ளிட்ட மண்சரிவு அபாய அறிகுறிகள் காணப்படுமாயின் மக்கள்
உடனடியாக அவ்விடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேகமூட்டத்துட னான காலநிலை தொடரும் சந்தர்ப்பங்களின் போது குறித்த பிரதேசங்களுக்கு பய ணிக்கும் வாகன சாரதிகளும் முன்னெச்சரிக்கையாக இருக்ககுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.