ஊடக நிறுவனங்களில் பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரது சொத்து விபரங்களை கோர வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
நாங்கள் பணம் திரட்டுவதற்கு பாராளுமன்றத்திற்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான சொத்து விபரங்கள் தொடர்பில் ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துவிபரங்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகள் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. ஆகவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் சொத்துவிபரங்களை சமர்ப்பிப்பது போன்று ஊடக பிரதானிகளும் பத்திரிகை ஆசிரியர்களும் ஊடகவியலாளர்களும் சொத்துவிபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதன்போது சபாநாயகர் கரு ஜெயசூரிய கூறுகையில், இது எனக்கு பொறுப்பான காரியமல்ல. ஊடகவியலாளர்கள் குறித்தான சொத்து விபரங்களை எடுப்பதற்கு எனக்கு அதிகாரம் கிடையாது என்றார். இதன்போது மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க கூறுகையில், அனைத்து ஊடகவியலாளர்களையும் தப்பாக எண்ண வேண்டாம். நீங்கள் கூறுவது தவறாகும். ஊடகவியலாளர்களிடம் சொத்து விபரங்களை கோரமுடியாது. அதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு கிடையாது. எனினும் பத்திரிகை ஆசிரியர் சொத்து விபரங்களை பத்திரிகை பேரவைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து சபாநாயகர் கரு ஜெயசூரிய பதிலளிக்கையில், இது தொடர்பாக ஊடகத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றேன் என்றார்.