நியூயார்க்கில் பாகிஸ்தான் வங்கி மூடல்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

358 0

நியூயார்க் நகரில் செயல்பட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஹபீப் வங்கியை மூட அமெரிக்க அரசு அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், அந்த வங்கிக்கு 225 மில்லியன் டாலர்களை(சுமார் ரூ.1,460 கோடி) அபராதமும் விதித்தது.

அமெரிக்காவில் இயங்கி வரும் வெளிநாட்டு வங்கிகளை அந்நாட்டின் நிதிச் சேவை ஒழுங்காற்று இலாகா கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் நியூயார்க் நகரில் செயல்பட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஹபீப் வங்கி கிளை மீது டிரம்ப் நிர்வாகம் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வங்கி அமெரிக்க அரசாங்கத்துடன் 2006-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறும் விதமாக பணமோசடி, பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பது மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அமெரிக்க நிதிச் சேவை ஒழுங்காற்று இலாகாவிடம் கடந்த ஆண்டு தாக்கல் செய்யவில்லை.

இதைத்தொடர்ந்து ஹபீப் வங்கியை இழுத்து மூட அமெரிக்க அரசு அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், அந்த வங்கிக்கு 225 மில்லியன் டாலர்களை(சுமார் ரூ.1,460 கோடி) அபராதமும் விதித்தது.

இதுபற்றி நிதிச் சேவை ஒழுங்காற்று இலாகா அதிகாரிகள் கூறுகையில், “எங்களது விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் நடந்தால் அது பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கான கதவுகளை திறந்துவிடுவதாக அமையும். இது எங்கள் நாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவேதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்றனர்.

Leave a comment