மாத்தயா றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் – நீனா கோபால்

550 0

prabhakaran-mahatayaவிடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயா எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா, இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் என்று, இந்திய ஊடகவியலாளர் நீனா கோபால் எழுதி, வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன்னதாக, ராஜீவ்காந்தியை செவ்வி கண்ட நீனா கோபால், ‘ராஜீவ்காந்தி படுகொலை’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரதித் தலைவராக செயற்பட்ட மாத்தயா, 1989ஆம் ஆண்டு தொடக்கத்தில் றோவின் முகவராக சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்று கூறியுள்ளார்.

மாத்தயா ஒரு றோ உளவாளி. 1989ஆம் ஆண்டு தொடக்கத்தில், றோ அவரை உளவாளியாக நியமித்திருந்தது.
ஆழமாக அவர் புலிகள் இயக்கத்துக்குள் எழுச்சி பெற்று, பிரபாகரனை அகற்றி விட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவிருந்தார்.

றோவுடன் தொடர்பில் இருந்த மாத்தயா பின்னர், இந்தியப் புலனாய்வு முகவர் என்று குற்றம்சாட்டப்பட்டு விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். அதனை இந்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவோ, ஐபி எனப்படும் புலனாய்வுப் பிரிவோ அறிந்திருக்கவில்லை.

1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று பற்றிய தகவலை இந்தியாவுக்கு மாத்தயா வழங்கியிருக்கலாம் என்று விடுதலைப் புலிகள் சந்தேகித்தனர். அந்தக் கப்பலில் பயணம் செய்த பிரபாகரனின் இளவயது நண்பனான, விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டு மரணமானார்.

மாத்தயா விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு, முகாம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டு பல வாரங்களாக சித்திரவதை செய்யப்பட்டார். அவர் பேசும் வரையில் சித்திரவதைகள் இடம்பெற்றன.

இறுதியாக, அவர் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் கழித்து, 1994 டிசெம்பரில் கொல்லப்பட்டார். 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1990ஆம் ஆண்டு வரை, இந்திய இராணுவத்தினர் சிறிலங்காவில் இருந்த போது, விடுதலைப் புலி்களுக்குள் றோ ஊடுருவிய போதிலும், இந்திய இராணுவமும், சிவில் புலனாய்வுப் பிரிவும், இராஜதந்திரிகளும் குறுக்கு நோக்கங்களுக்காக பணியாற்றினர்.

நாம் சமிக்ஞைகளைச் சரியாகப் படித்திருந்தால், பிரபாகரனின் மனதில் என்ன ஒடுகிறது என்பதை நாம் விளங்கிக் கொண்டிருந்தால், நாம் அதனை( ராஜீவ் காந்தி படுகொலை) தடுத்திருக்க முடியும் என மூத்த றோ அதிகாரி ஒருவர் கூறினார்.
நாம் ராஜீவ்காந்தியைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.” என்றும் அவர் கூறியதாக நீனா கோபால் எழுதியுள்ளார்.