தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.32½ லட்சம் சுருட்டிய இளம்பெண் கூட்டாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் தனிநபர் கடன் வாங்கித்தருவதாக கூறி பொதுமக்களுக்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்தும், வங்கிகளிடம் இருந்தும் இதுபோன்று அழைப்பு வருவது உண்டு. குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாக கூறி பெரம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது கூட்டாளிகள் 3 பேரிடம் சேர்ந்து ரூ.32½லட்சம் மோசடி செய்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையை மையமாக கொண்டு பஜாஜ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சென்னையில் பல இடங்களில் கிளைகள் உள்ளன. பஜாஜ் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சென்னையில் உள்ள பிரபலமான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிலையங்களில் பணியில் உள்ளனர். இவர்கள் தங்களது நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கடன் உதவி ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.
இவர்களுடன் சேர்ந்து கொண்டு பெரம்பலூர் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி(34) என்ற பெண் பொதுமக்களிடம் போனில் பேசி கடன் வாங்கி தருவதாக ஏமாற்றிரூ.32½ லட்சம் பணத்தை சுருட்டியுள்ளார்.
இதுபற்றி தெரிய வந்ததும் பஜாஜ் நிதி நிறுவனம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
எங்களது நிறுவனம் சார்பில் வட்டியில்லா கடனில் வீட்டு உபயோக பொருட்களும், கடனும் ஏற்பாடு செய்து தருவதாக லோகேஸ்வரி என்ற பெண் பொதுமக்களின் பெயரில் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி தனது வீட்டில் கோண்டு போய் வைத்துள்ளார்.
இதற்கு எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பிரசாந்த், பிரபல தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் சுரேந்தர், விநாயகம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுபற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். கூடுதல் துணை கமிஷனர் ராதா கிருஷ்ணன் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் லோகேஸ்வரி உள்ளிட்ட 4பேரும் சேர்ந்து 27 பேரிடம் மோசடி செய்தது தெரிய வந்தது. இந்த 27 பேரும் வாங்கியதுபோல 44 வகையான வீட்டு உபயோக பொருட்களை வாங்கி வெளியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சுரேந்தர் மட்டும் கைது செய்யப் பட்டுள்ளார். லோகேஸ்வரி மற்றும் கூட்டாளிகள் இரு வரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.