அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து நோட்டீஸ் வழங்கி உள்ளன.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு முடிவடைந்தும், புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படவில்லை.
எனவே, புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று பல்லவன் இல்லத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பர் 24-ம் தேதி வேலை நிறுத்தம் தொடர்பான முடிவு அறிவிக்கப்படும். செப்டம்பர் 24-ம் தேதியில் இருந்தே வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.